Home » நீ வேறு, நான் வேறு – 72
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 72

72. காரணங்களின் கதை

இந்த நீண்ட நெடிய வரலாற்றின் மிகத் தீவிரமான, சிக்கலுக்கும் சந்தேகத்துக்கும் உரிய, தெளிவான, திட்டவட்டமான ஆதாரங்களற்ற – ஆனால் இன்றியமையாததொரு புள்ளியில் நிற்கிறோம். இந்தியாவும் பலூசிஸ்தானும். அதன் உறவும் நெருக்கமும். விருப்பங்களும் முயற்சிகளும். லாபங்களும் நட்டங்களும்.

மாபெரும் போராட்டத்துக்குப் பிறகு பலூசிஸ்தான் தனது விடுதலையை பகிரங்கமாக அறிவித்தது. மாநிலமே கொந்தளித்துக் கைதுகளாலும் கலவரங்களாலும் பி.எல்.ஏ நடத்திக்கொண்டிருந்த தொடர் தாக்குதல்களாலும் கொத்துக் கொத்தாக விழுந்துகொண்டிருந்த உயிர்களாலும் தத்தளித்துக்கொண்டிருந்தது. அமெரிக்காவும் சீனாவும் மிக வலுவாகப் பாகிஸ்தானை ஆதரித்துக்கொண்டிருப்பது பலூச்சிகளுக்குத் தெரியாததல்ல. பொழுது போகாவிட்டால் தனது ராணுவ விமானங்களை உலகின் எந்த மூலைக்கும் அனுப்பி ஓர் ஆட்டம் ஆடிவிட்டுத் திரும்பும் வழக்கம் கொண்ட அமெரிக்கா, பலூசிஸ்தானை கணப் பொழுது பொருட்படுத்திவிடுமானால் மொத்தமும் முடிந்தது. இருக்கவே இருக்கிறது, தீவிரவாதத்துக்கு எதிரான உலகு தழுவிய போர் என்கிற பழைய டெம்ப்ளேட். ஆனால் ஆப்கனிஸ்தானை உண்டு இல்லை என்று ஒரு வழியாக்கிப் பிய்த்துப் போட்ட பரோட்டா போலச் செய்து முடித்துவிட்டுத் தாலிபன் கையிலேயே நாட்டை ஒப்படைத்துவிட்டுச் சென்ற பரம புருஷர்கள் அவர்கள். அமெரிக்கக் கணக்குகள் சாமானியர்களுக்கு அத்தனை எளிதில் புலப்படாது. பலூசிஸ்தானெல்லாம் அவர்களுக்கு ஒன்றுமேயில்லை. வா என்று பாகிஸ்தான் கூப்பிடவில்லை என்பதுதான் இன்றைய தேதியில் உள்ள மிக எளிய காரணம்.

சரி. சீனா அங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வர்த்தக உறவுதான் என்றபோதும், சீனா இருக்கும் இடத்தில் கோக்குமாக்காக அமெரிக்க ராணுவத்தை உதவிக்குக் கூப்பிடப் பாகிஸ்தான் விரும்பாது. தவிரவும் தனது உள்நாட்டுச் சிக்கலுக்கு அமெரிக்காவை உதவிக்குக் கூப்பிடுவது மானப் பிரச்னையும்கூட. ஆயுத உதவிகள், ராணுவத் தளவாட உதவிகள் அனைத்தும் இருக்கவே இருக்கிறது. போதவில்லை என்று சொன்னால் இன்னும் இன்னும் கப்பலேற்றி அனுப்பி வைப்பார்கள். அதில் சந்தேகமில்லை. நேரடி அமெரிக்க ராணுவ சப்ளை இப்போதைக்கு இருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும்தான் பலூச்சி இயக்கங்களின் ஒரே நம்பிக்கை. சீனாவின் விஷயமும் கிட்டத்தட்ட இதுதான். அவர்கள் பலூசிஸ்தானில் ‘களப்பணி’ ஆற்றிக்கொண்டிருக்கும் பிராந்தியங்களில் மட்டும் தங்கள் பாதுகாப்புக்காக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்துகொள்கிறார்கள். ராணுவம், உளவுத் துறை உள்பட ஒரு குட்டி சீனப் பாதுகாப்புத் துறைக் கிளை அலுவலகம் பாகிஸ்தானில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!