67. திடீர் வீரம்
பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் கராச்சி பங்கு வர்த்தக மையம் மீதான தாக்குதல் தோல்விதான். ஆனால், பலூசிஸ்தான் விடுதலை என்னும் பல்லாண்டு காலப் பெருங்கனவை எட்டிப் பிடிப்பதற்கு இனி மாநில எல்லைகளைக் கடந்து தாக்குதல் செய்வது ஒன்றே வழி என்று கிட்டத்தட்ட அனைத்து இயக்கங்களும் முடிவு செய்தன. இதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு.
1948 ஆம் ஆண்டு முதல் பலூசிஸ்தானில் ஒரு சிறிய தாக்குதல் சம்பவமாவது நடைபெறாத நாள் அநேகமாகக் கிடையாது. ஒன்று இவர்கள் தாக்குவார்கள், அல்லது அவர்கள் தாக்குவார்கள். யாரும் யாரையும் தாக்கவில்லை என்றால் பொது மக்களில் ஒரு சிலரை – குறைந்தது ஒருவரையாவது பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று காணாமலாக்கிவிடும். பரப்பளவு அடிப்படையில் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம் பலூசிஸ்தான். ஒரு மூலையில் ஒரு கடத்தல் சம்பவம் நடந்ததென்றால் அது பிராந்தியம் முழுவதும் தெரிய வருவதற்கே சில நாள்கள் எடுக்கும். ஆனால் தப்பித் தவறிக்கூட பலூசிஸ்தானுக்கு வெளியே செய்தி போகாது. நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி எதிலும் வராது. காவல் நிலையப் புகார்கள்கூட அந்தந்தக் காவல் நிலையங்களிலேயே பத்திரமாகப் பேணிப் பராமரிக்கப்படுமே தவிர, நீதிமன்றம் செல்பவைகூட மிகக் குறைவு. சென்றாலும் பயன் இருக்காது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பி.எல்.ஏ நடத்திய பங்குச் சந்தைக் கட்டடத்தின் மீதான தாக்குதல் தோல்வியுற்றாலும் அடுத்த சில மணி நேரங்களில் உலகெங்கும் தகவல் பரவிவிட்டது. இது அவர்களே எதிர்பாராதது. டிசம்பர் 13, 2001 அன்று புது டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்து லஷ்கர் ஏ தொய்பா மற்றும் ஜெய்ஷ் ஏ முகம்மது அமைப்புகளின் தீவிரவாதிகள் ஐந்து பேர் தாக்கி, உயிரிழந்த சம்பவம் நினைவிருக்கிறதல்லவா? கிட்டத்தட்ட அதே மாதிரியான முயற்சிதான் இது. இந்தியா விஷயத்தில், ஆண்டாண்டுக் காலமாகப் பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்து வரும் விவகாரங்களை உலகறியும். பலூசிஸ்தானைப் பொறுத்தவரை, அது ஓர் அரசுக்கு எதிரான ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் பிரிவினைவாதிகளின் கிளர்ச்சி என்ற அளவோடு அணுகப்பட்டதால், பிரச்னையின் ஆழமும் தீவிரமும் யாருக்கும் தெரியாதிருந்தது. இந்தப் பங்குச் சந்தைத் தாக்குதல் அதற்கான கதவை அகலமாகத் திறந்து வைத்தது.









Add Comment