நடிப்பின் இலக்கணம் என்று அறிஞர் அண்ணாவாலும், அஷ்டாவதானி என்று திரையுலகினராலும் அழைக்கப்பட்ட நடிகை பானுமதி ராமகிருஷ்ணாவின் நூற்றாண்டு விழா இந்த மாதம் கொண்டாடப்படுகிறது.
1925 செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம், பிரகாசம் மாவட்டத்தில் தோடவரம் என்ற ஊரில் பிறந்தவர் பானுமதி. தந்தை பொம்மராஜி வேங்கட சுப்பையா. தாயார் சரஸ்வதம்மா. நல்ல இசைஞானம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவருக்கு இசை நாட்டம் இல்லாமல் போகுமா? சிறுவயதிலிருந்தே கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ள வைத்தார் பானுமதியின் தந்தை. தியாகராஜர் கீர்த்தனைகள் மேல் அலாதி பக்தியும் ஆர்வமும் இவருக்கு இருந்தது. அப்படி இவர் பாடிய ஒரு கச்சேரியைக் கேட்க வந்திருந்தார் பிரபல இயக்குனர் சி புல்லையா. தான் இயக்கும் ‘வர விக்ரயம்’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க இவரை விட்டால் வேறு ஆள் இல்லையென முடிவு செய்தார். ஒரு பணக்கார முதியவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் பதின்மூன்று வயதுப் பெண் கதாபாத்திரம் அது. மிகவும் சிரமப்பட்டுப் பேசிப் புரிய வைத்துப் பானுமதியின் தந்தையைச் சம்மதிக்க வைத்தார்.
யாரும் தொட்டு நடிக்கக் கூடாது, கட்டிப் பிடிக்கும் காட்சிகள் கூடாது, பாடல்களைத் தன்னுடைய மகள்தான் பாட வேண்டும் எனப் பல நிபந்தனைகள் விதித்தார் பானுமதியின் தந்தை. புல்லையா அனைத்துக்கும் ஒப்புக்கொண்டு நடிக்க வைத்தார். முதல் படத்திலேயே ஒரு தியாகராஜர் கீர்த்தனையைப் பாடி நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றி. ஆனால் பானுமதிக்கு பாட விருப்பமே தவிர நடிப்பதில் விருப்பமில்லை. திறமை எங்கு இருந்தாலும் அது வெளிப்பட்டே தீர வேண்டும். வந்தது அடுத்து ஒரு திரைப்பட வாய்ப்பு. மாலதி மாதவம். பக்திமாலா, கிருஷ்ணப்ரேமம் எனத் தொடர்ந்து படங்கள். கிருஷ்ணப்ரேமம் இவரது வாழ்க்கையை மாற்றிய படம். அந்தப்படத்தில்தான் தனது வருங்காலக் கணவர் ராமகிருஷ்ண ராவைச் சந்தித்தார்.














Add Comment