‘பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் விமான நிலையம் இருக்கிறது’ என்ற பெயர்ப் பலகையும், ‘வன யானைகள் குறுக்கிடும் பகுதி, கவனம்’ என்று கிலி பிடிக்க வைக்கும் இன்னொரு அறிவித்தல் பலகையும் அடுத்தடுத்து நடப்பட்டிருந்தால் விமானநிலையத்திற்குச் சென்று கொண்டிருக்கும் பயணிக்கு எப்படியிருக்கும்? இப்படியொரு கோமாளித்தனத்தை இலங்கைக்குத் தெற்கே மகிந்த ராஜபக்சவின் பிறந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையிலிருந்து இருபத்தெட்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் மத்தளை ராஜபக்ச விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் போது ரசித்து மகிழலாம்.
காட்டில் அதன்பாட்டுக்கு சுற்றித் திரிந்த மயில்களையும், மான்களையும் யானைகளையும் மிரண்டோடச் செய்த மகிந்த ராஜபக்ச அரசு, 2013ம் ஆண்டு கட்டிய விமான நிலையம் அது. ஒரே வரியில் சொன்னால் பைசா தேறாத வெறும் கொங்கிரீட் மாளிகை, குட்டி போட்ட வட்டிகளுடன் 260 மில்லியன் டாலர்கள் சீனக் கடனில் மூழ்கித் திணறிக் கொண்டிருக்கிறது.
Add Comment