ரஷ்யாவுக்கு உக்ரைன் ஒரு ஓமப்பொடிப் பொட்டலம். இஸ்ரேலுக்கு பாலஸ்தீன் ஒரு பக்கோடா பொட்டலம். அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரண்டு வல்லரசுகளுக்கும் சிரியா ஒரு சிப்ஸ் பாக்கெட். பொழுதுபோக்காக மென்றுகொண்டிருக்க ஏதோ ஒன்று வேண்டியிருக்கிறது என்று எளிதில் கடக்க இயலாது. சிலருக்கு யாரையாவது எப்போதும் பதற்றமாகவே வைத்துகொண்டிருந்தால்தான் வாழ்ந்தது போலவே இருக்கும். சில பிராந்தியங்களுக்கும் அப்படித்தான். தென்சீனக் கடல் பிரதேசமும் அப்படிப்பட்ட ஒன்று. பெருவயிறுடைய யானையாகச் சீனா நடுவில் நீராடுகையில் குட்டி மாவிலை போலப் பக்கத்தில் மிதக்கிறது தாய்வான் தீவு. கிழக்கே கொஞ்சம் அண்ணாந்து பார்க்கும் தூரத்தில் ஜப்பான். மேலும் கீழும் முறையே தென் கொரியாவும் பிலிப்பீன்ஸும். இந்த எல்லாவற்றுக்கும் இடையில் இனந்தெரியாத ஒரு பாசவலை பின்னப்பட்டிருக்கிறது. இந்த வாரம் அந்தப் பாசத்தின் உச்சமாகச் சீனா தனது கைகளைத் தாய்வானின் எல்லைக்குள் புகுத்தி அழகு பார்த்தது.
நடந்தது இதுதான். தாய்வானின் புது ஜனாதிபதி லாய் சிங் டே, மே இருபதாம் தேதி பதவியேற்ற சூடுகூடத் தணியாத நிலையில், அவரது முதல் உரையில் பேசிய சில விடயங்கள் சீனாவுக்குப் பிடிக்கவில்லை. அதற்குத் தகுந்த தண்டனையாக ,தங்களது இறைமையைப் பாதுகாக்கும் ஒரு அதிரடி நடவடிக்கையாக, சீனாவின் போர் விமானங்களும் கப்பல்களும் தாய்வானைச் சூழ்ந்து கொண்டன. தீவின் கரைகளை எட்டித் தொடும் தூரத்தில் நின்றுகொண்டு சீன ராணுவ வல்லாதிக்கம் போரியல் நாடகம் ஒன்றுக்குத் தயாரான போது, புதிய தாய் ஜனாதிபதியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. களத்தில் இறங்கி, அவர் தரப்புப் படையினரையும் பலப்படுத்தத் தொடங்கி விட்டார். தாய் விமானங்களும் பறந்தன. பிராந்தியத்துக்கே உரிய பதற்ற சூழ்நிலை வெற்றிகரமாக அரங்கேறியது. தம் படைகளையும் அணிவகுக்கச் சொல்லிவிட , வழக்கம் போல உலக நலன் விரும்பி, ஊருக்கு உபதேசப் புகழ், அண்ணன் அமெரிக்காவும் தக்க சமயத்தில் உதவிக் கரம் நீட்டுவதாக அறிவிக்க, சீனாவும் கேளிக்கைகளை முடித்துக் கொண்டு கிளம்பிப் போய்விட்டது.
இதெல்லாம் இன்று நேற்று இவ்வுலகம் கண்ட செய்திகளல்ல. பல நூற்றாண்டு காலப் பிரச்னையொன்றின் அண்மைக் கால முகம் மட்டுமே. இத்தனைக்குப் பிறகும் தாய் மக்கள் எதுவித பயமுமின்றி, பேட்டி கொடுக்கின்றனர்.
Add Comment