சமீபத்தில் தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு ஒரு பேசுபொருளானது. அரசியல் கிடக்கட்டும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தப் போட்டித் தேர்வில் வென்று ஓர் அரசு வேலையைப் பெறுவது எளிதா? சிரமமா?
குரூப்-II, குரூப்-I தேர்வுகள் பிரிலிம்ஸ், மெய்ன்ஸ், இன்டர்வியூ என்று மூன்று படிநிலைகளைக் கொண்டவை. ஒரு கண்டமே பெருங்கண்டம். இதில் மூன்று கண்டங்களையும் தாண்டிவருவதற்குப் பொறுமையும் மனோதிடமும் வேண்டும்.
குரூப்-IV தேர்வில் மட்டும்தான் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றாலே வேலைக்குச் சென்றுவிடலாம். எனவே அரசு வேலை என்ற கனவில் இருப்பவர்கள் முதலில் குரூப்-IVஐத் தான் தேர்ந்தெடுப்பார்கள்.
இதற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு. பதினெட்டு வயது முடிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற குரூப் தேர்வுகளுக்கு உச்ச வயதுவரம்பு உண்டு. இதற்கு அதுவும் இல்லை.
சரி… பத்தாவது படித்தவர்கள் தான் இத்தேர்விற்கு விண்ணப்பிப்பார்களா என்றால் இல்லை. எம்.ஈ, பி.எச்.டி. ஃபிசியோதெரப்பிஸ்ட் என்று நாட்டில் என்னென்ன உயர் படிப்புகள் இருக்கின்றனவோ அத்தனையும் படித்தவர்கள்தான் விண்ணப்பித்துவிட்டு கோச்சிங் வகுப்பில் அமர்ந்திருப்பார்கள். ஒரு குரூப்-IV வேலையாவது வாங்கிவிட வேண்டும் என்று தீயாகப் படிப்பார்கள். ஒருவகையான, மறைமுக வேலையின்மை பெருகிக் கொண்டிருப்பதைத்தான் இவை நமக்குக் காட்டுகின்றன.
Add Comment