வரப்போகும் அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வெற்றியைக் கொடுக்க ஆயிரத்து 207 அலுவலகங்களைத் திறக்கப் போகிறார்களாம்- அதுவும் பத்து நாள்களுக்குள். திறக்கட்டும். இடையில் ஒருவர் நீதிமன்றத்தில் அதிபர் தேர்தலை வேலைகளை நிறுத்தி வைக்க மனுப்போட்டிருக்கிறார். சிரிசேனா அதிபராக இருந்தபோது 19-ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தின்படி ஐந்து வருடங்கள் என்று அதிபர் பதவிக் காலம் மாற்றப்பட்டது. ‘எனக்குப் பிறகுதான் இந்த திருத்தம்’ என்று சொல்லி போகாமல் அடம்பிடித்தவரை நீதிமன்றம்தான் வழியனுப்பி வைத்தது. ஐந்தா ஆறா என்று தாயக்கட்டையை உருட்டாமல் தெளிவாகத் தீர்த்துச் சொல்லும் வரை தேர்தல் வேண்டாம் என்கிறது மனு.
ஜூன் 26-ஆம் தேதி புதன்கிழமை இரவு ஜனாதிபதி ரணில், மக்களுக்கு உரையாற்றினார். ‘ஜக்கம்மா, நல்ல காலம் பொறக்குது’ என்று அவரது அருவருடிகள் பெரும் செலவில் இந்த உரை பற்றி எப்போதோ விளம்பரம் செய்யத் தொடங்கி இருக்க, மன்னர் கால ஆட்சி நடக்கும் தேசம் ஒன்றின் சுயம்வரம்போலக் கடந்த இரு வாரங்களாக இது ஒன்றுதான் இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தது.
‘ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகிறேன்’ என்று அறிவிக்கப் போகிறார் என்று பலத்த அபிப்பிராயம் நிலவ, மணிரத்தினம் படத்தில் வருவது போல ராத்திரி எட்டுமணிக்குக் குறைந்த ஒளியில் தொலைக்காட்சியில் தோன்றினார்.
தன் இடுப்பளவுக்கு டவுசர் அணியத் தெரியாதவர், நாட்டின் மக்கள் அளவுக்கு பொருளாதாரத்தை எப்படிக் கட்டியெழுப்பப் போகிறார் என்று ரணில் மீது ஒரு நையாண்டி விமர்சனம் உண்டு. உட்கார்ந்து கொண்டு உரையாற்றியதால் டவுசர், நாட்டின் பொருளாதாரம் போல சரிந்து கொண்டிருந்ததா என்று தெரியவில்லை. ஃபாரிஸ் கிளப், மற்றும் சீன எக்ஸிம் வங்கியுடன் ஏற்படுத்திக் கொண்ட கடன் மறுசீரமைப்பு வெற்றியளித்து விட்டதாகவும் 2028 வரை கடன் செலுத்துதல் தள்ளிப் போய்விட்டதாகவும் 2043-ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்தக் கடன்களையும் செலுத்தி முடிக்க உத்தேசித்து இருப்பதாகவும் இனி எங்கள் நாட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்றும் சொன்னார்.
Add Comment