”சிகரம் கிடைத்த பின்பும் இறங்கி வந்து சேவை செய்து, மக்களுக்கு நன்றி செலுத்தும் காலமிது”
“தமிழன் கொடி பறக்குது…தலைவன் யுகம் பொறக்குது”
”மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது”
மேலே குறிப்பிட்ட வரிகள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து ஒலிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி அதற்கான பாடலையும் நடிகர் விஜய் வெளியிட்டார் அந்தப்பாடலில் ஒலிக்கும் வரிகள் தான் மேலே உள்ளது. வெளியான இருபது மணி நேரத்தில் இருபத்தி ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பாடலைப் பார்த்துள்ளனர். சமீப காலங்களில் வெளியான அரசியல் பாடல்களில் இது சற்று ஈர்ப்புடன் அமைந்துள்ளது என்றே கருத்துகள் வருகின்றன.
கடந்த வாரம் வியாழன் அன்று காலை மீடியாக்களுக்குக் கொண்டாட்டமான ஒரு நாளாக அமைந்தது. காலையில் இருந்தே அமைச்சரவை மாற்றம், உதயநிதி துணை முதல்வராக அறிவிப்பு, மூத்த அமைச்சர் ஒருவருக்கு ஓய்வு என்று தகவல்கள் பரவத் தொடங்கின. செய்தி சேனல்கள் இதற்கு முக்கியத்துவம் தரத் தொடங்கின. மெல்ல ஆரம்பித்த இந்தத் தகவல் நீர்த்துப் போக ஆரம்பித்தது. விஜய் கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியிலிருந்து கவனம் திருப்ப ஆளும் கட்சி உபயோகித்த துருப்புச் சீட்டு தான் அமைச்சரவை மாற்றம் என்று சில மூத்த அரசியல்வாதிகளே பேச ஆரம்பித்தனர்.
பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் காலை 9.15 க்கு விஜய் கொடியேற்றிப் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மீடியாக்கள் கூட்டமாக அங்கே படையெடுக்க ஆரம்பித்தன. ஒரு பெரிய தடுப்பு அமைக்கப்பட்டு வருபவர்கள் அதில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காமிரா சகிதம் நிற்க ஆரம்பித்தனர். அதிகாலையில் இருந்தே கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. கட்சியின் முக்கியத் தலைவரான புஸ்ஸி ஆனந்தும் விஜயின் வலது காரணமான ஜெகதீஷும் அவர் வரவிற்காக வாசலிலேயே காத்திருந்தனர். கையில் ஒரு மஞ்சப் பையுடன் அலைந்து கொண்டிருந்த ஆனந்த், பத்திரிகையாளர்களும், காட்சி ஊடகக்காரர்களும் அமைதியாக இருக்க முயற்சிகள் மேற்கொண்டு இருந்தார். “முடிஞ்ச உடனே கண்டிப்பாப் பாத்துட்டு போங்க. சாப்பிட்டுட்டுப் போங்க. பாக்காமல் போயிடாதீங்க” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
Add Comment