38. முனிவர்
ரானடே புணேவின் முடிசூடா மன்னர் என்று அழைக்கப்பட்டதைப் பார்த்தோம். அதே காலகட்டத்தில் இந்தியாவின் முடிசூடா மன்னர் என்று புகழப்பட்ட ஒரு பெருந்தலைவர் இருந்தார். அவர், தாதாபாய் நௌரோஜி.
‘ஒருவேளை, இந்த விநாடியில் இந்தியாவில் மக்களாட்சி அமைந்துவிட்டால், நாடுமுழுவதுமுள்ள மக்கள் வாக்களித்துத் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுத்தால், தாதாபாய் நௌரோஜிதான் இந்தியாவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்’ என்று அப்போதைய இதழ்கள் எழுதியதுண்டு. அந்த அளவுக்கு அன்றைய இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் தாதாபாயின் புகழ் பரவியிருந்தது. அவரளவுக்கு இந்திய விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்களும் இல்லை, ஆங்கிலேயர்களுடைய ஊரிலேயே அமர்ந்துகொண்டு பேச்சாலும், எழுத்தாலும் அவர்களைக் கடுமையாக விமர்சிக்கிற துணிச்சலும் வேறு யாருக்கும் வந்ததில்லை.
மும்பையில் பிறந்த தாதாபாய் குஜராத்திக் குடும்பத்தைச் சேர்ந்தவர். படித்துவிட்டுச் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார், அதன்பிறகு, வர்த்தகத் தொழிலில் இறங்கிவிட்டார். அந்தத் தொழில்தான் அவரை இங்கிலாந்துக்கு அழைத்துச்சென்றது. பின்னர் அவர் அங்கேயே குடியேறிவிட்டார்.










Add Comment