21. பெயர்
நிலம் சமமாக இருந்தது. வீதியின் இரு புறமும் கோலிட்டுச் சமன் செய்த தோரணையில் உறைபள்ளிகளும் கூடங்களும் பேரங்காடிகளும் ஒரே விதமான உயரமும் பரப்பும் கொண்டிருந்தன. ஒவ்வொரு மனையின் முன்பும் நான்கைந்து மரங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றேனும் மருதமாக இருந்தது. வீதியின் ஓரெல்லையில் பாடசாலையும் இன்னோர் எல்லையில் கைவினைக் கூடமொன்றும் இருந்தன. கற்கள் பொதித்து மேலே மண் பாவப்பட்ட அகன்ற சாலையில் எங்குமே மேடு பள்ளங்கள் தென்படவில்லை. சகடங்கள் செல்லத் தடம் விட்டு மக்கள் சாலையின் இரு ஓரங்களிலும் மட்டும் நடந்து செல்வதைக் காண முடிந்தது. நல்ல வெயிற்பொழுதாக இருந்தும் மரங்கள் அடர்ந்திருந்ததால் நடந்து சென்ற யாருக்கும் வியர்க்கவில்லை என்பதைக் கவனித்தேன்.
அவன் நெடுநேரமாக நடந்துகொண்டிருந்தான். எந்தக் குறிப்பிட்ட இடத்தையும் இலக்கெனக் கொள்ளாதவனாகத் தலை நகரினைச் சுற்றிப் பார்க்க வந்தவனைப் போலவே தென்பட்டான். அவனது தோற்றம் மிக நிச்சயமாக ராசவித்யாதரப் பெருவீதியில் கண்டோரை முகம் சுளிக்கச் செய்தது. ஆனால் யாரும் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. அவன் நெருங்க நேர்ந்தால் யாரும் உடனே விலகிச் செல்லவும் இல்லை. ஆயினும் அவன் நெருங்கிச் சென்ற நபர்களின் மனச் சுருக்கத்தை அறிந்தேன்.










Add Comment