55. தகுதியுள்ள இளைஞர்
1901 ஜனவரி 15 அன்று, கோகலே ஃபிரோஸ்ஷாஹ் மேத்தாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
மிகுந்த பணிவோடும் வெளிப்படைத்தன்மையோடும் நேர்மையாகவும் பாசாங்கில்லாமலும் எதார்த்தமாகவும் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைப் படிக்கும்போது, கோகலேவின் அரசியல் எப்படிப்பட்டது என்று தெளிவாகப் புரிகிறது. அத்துடன், இந்தக் கடிதம் கோகலேவின் பொதுவாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. அதனால், சற்று நீளமான இந்தக் கடிதத்தைச் சுருக்கமாகத் தொகுத்துச் சொல்லிவிடுகிறேன்.
முதலில், ஃபிரோஸ்ஷாஹ் மேத்தா தன்னுடைய உயர்நிலைச் சட்டப் பேரவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகப்போவதாகத் தான் கேள்விப்பட்டதைச் சொல்கிறார் கோகலே, பிறகு, அவர் அந்தப் பொறுப்பில் தொடரவேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பம் என்பதையும் தெளிவாகத் தெரிவித்துவிடுகிறார், ‘நீங்கள் இந்தப் பொறுப்புக்கு மிகவும் தகுதியானவர். ஏனெனில், ஓர் அரசியல் தலைவருக்கு இருக்கவேண்டிய இயற்கையான, வளர்த்துக்கொண்ட திறமைகள் அனைத்தும் உங்களிடம் நிறைந்துள்ளன. இவற்றில் உங்களுக்கு இணையாக, அல்லது, உங்களுக்குச் சற்று அருகில் வரக்கூடிய தலைவர்கள்கூட யாரும் இல்லை என்றுதான் எல்லாரும் நினைக்கிறோம். அதனால், உங்களுடைய உடல்நலம் அனுமதிக்கிறவரையில், நீங்கள் ஆற்றலுடன் உள்ளவரையில் நீங்கள்தான் உயர்நிலைச் சட்டப் பேரவையில் பம்பாய் மாகாணத்தின் பிரதிநிதியாக இருக்கவேண்டும்.’









Add Comment