60. இந்தியாவின் கிளாட்ஸ்டோன்
பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் நிதி நிலை அறிக்கையையும் ஆட்சி சார்ந்த கொள்கைகளையும் கோகலே கழுவித் தோய்த்துக் காயப்போட்டு ஓராண்டுக்குப்பிறகு, 1903ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை பேரவையில் முன்வைக்கப்பட்டது. முந்தைய ஆண்டு கோகலே கேட்டிருந்த பல விஷயங்கள் இதில் செயல்படுத்தப்பட்டிருந்தன.
எடுத்துக்காட்டாக, உப்பு என்பது ஏழை மக்களின் அடிப்படைத் தேவை, அவர்களுடைய உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான கட்டாயச் செலவு. அதனால், உப்பின்மீதான வரியைக் குறைக்கவேண்டும் என்று கோகலே பேசியிருந்தார். அதேபோல், யாரெல்லாம் வருமான வரி செலுத்தவேண்டும் என்பதற்கான குறைந்தபட்ச வரம்பை உயர்த்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இது நடுத்தரக் குடும்பங்களின் வரிச்சுமையை மிகவும் குறைக்கும்.
கோகலேவின் இந்தக் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவோ, அடுத்த ஆண்டு செய்வோம் என்று வாக்களிக்கவோ இல்லை. அப்போதைக்குக் கமுக்கமாக இருந்துவிட்டு அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அதையெல்லாம் சேர்த்துவிட்டார்கள்.










Add Comment