70. இந்தியக் கோரிக்கைகள்
1905 அக்டோபர் மாதத் தொடக்கத்தில் கோகலே இங்கிலாந்துக்கு வந்திறங்குகிறார். டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறப்போகிற காங்கிரஸ் மாநாட்டில் அவர் கலந்துகொள்ளவேண்டும். அதற்குமுன்னால் சுமார் இரண்டு வாரத்துக்குக் கப்பல் பயணமும் இருக்கிறது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவர் இங்கிலாந்தில் தங்கப்போவது சுமார் ஏழு வாரங்கள்தான்.
அவ்வளவு தொலைவிலிருந்து கோகலேவை வரவழைத்துவிட்டபின் அவருடைய நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று இங்கிலாந்திலிருந்த காங்கிரஸ் குழுவினர் நினைத்தார்கள், அதனால், அந்த ஏழு வாரங்களிலும் கூட்டங்கள், சந்திப்புகள், மேலும் கூட்டங்கள், மேலும் சந்திப்புகள் என்று போட்டுத் தாளித்துவிட்டார்கள்.
கோகலேவுக்கோ எதற்கும் எப்போதும் மறுப்பு சொல்லிப் பழக்கமில்லை. அதிலும் குறிப்பாக, நாட்டுச் சேவை என்று வந்துவிட்டால் அவர் ஒரு மடங்குக்கு நான்கு மடங்கு வேலை செய்கிற ஆள். அதனால், அவர் தனக்காகவோ, தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டோ இந்தத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்யவேண்டும் என்றெல்லாம் கேட்கவே இல்லை, அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட எல்லாக் கூட்டங்களிலும் அவர் கலந்துகொண்டு பேசினார். அவ்வப்போது ஒரே நாளில் இரண்டு கூட்டங்கள், மூன்று கூட்டங்களில்கூட அவர் பேசவேண்டியிருந்தது.










Add Comment