21. வேண்டாவெறுப்பும் காண்டாமிருகமும்
எல்லா ஆட்சியாளர்களும் எல்லைப் பகுதி மாநிலங்களைப் பற்றி நிறைய கவலைப்படுவார்கள். அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அங்குள்ள ராணுவப் பிரிவின் திறனை மேம்படுத்தவும் நிறைய செலவு செய்வார்கள். ஆனால், பெரும்பாலும் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களைக் குறித்து நினைக்க மறந்துவிடுவார்கள். அவர்களது விருப்பம், அவர்களது சௌகரியம், அவர்களது பழக்க வழக்கங்கள், அவர்களது நம்பிக்கை, அவர்களுடைய எதிர்பார்ப்புகள். இதனால்தான் உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில் சிக்கல்களின் கருப்பையாக விளங்குவது எல்லைப்புற மாநிலங்களாக இருக்கின்றன.
பலூசிஸ்தானைப் பொறுத்தவரை, பிரிட்டிஷ் இந்திய ஆட்சியாளர்கள் அந்தப் பகுதியைத் தமது மேற்கு எல்லையின் ஒரு பெரும்பகுதியாகக் கருதினார்கள். தவிரவும் இந்தியாவுக்குள் இருந்து மத்தியக் கிழக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் படைகளை நகர்த்திச் செல்ல போலன் கணவாய் ஒரு தவிர்க்க முடியாத இயற்கைத் தேவையாக இருந்தது. அங்கே பெரிய சிக்கல்கள் ஏதும் வந்துவிடக் கூடாது என்பதால்தான் கலாட் அரசின் சுதந்தர முழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும், பெரிய அளவில் அடக்குமுறை உத்திகளையும் பயன்படுத்தாமல் இருந்தார்கள். இல்லாவிட்டால் கலாட்டின் தனி நாடு அந்தஸ்து சார்ந்த முதல் குரல் எழுந்தபோதே கழுத்தை அமுக்கிக் கல்லறை கட்டியிருப்பார்கள்.
முன்னதாக பிரிட்டிஷ் பலூசிஸ்தான் ஏஜென்சி, அந்தப் பிராந்தியத்தில் ஒரு வலுவான ராணுவத்தை உருவக்கி வைத்திருந்தது. இது பெரும்பாலும் பலூச்சி-பிராஹி என்கிற இரண்டு இனக்குழு இளைஞர்களை உள்ளடக்கியது. பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர விருப்பமா என்று பலூசிஸ்தான் முழுவதிலும் போஸ்டர் ஒட்டி, கிராமங்கள்தோறும் தேர்வு மையங்கள் நிறுவி இதனை அவர்கள் ஆரம்பித்தார்கள். கட்டாயமில்லை. ஆனால் ராணுவ வீரர்களுக்குச் சம்பளத்தைவிட சலுகைகள் அதிகம். இது ஒன்றுதான் தூண்டும் சக்தி. மற்றபடி இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்த அளவுக்கு பலூசிஸ்தானில் அவர்களுக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில் பெரிய சிக்கல்கள் அங்கே இல்லை. ஏனெனில், பலூச்சிகளும் பிராஹிகளும் ஆளும் தோளும் வேல்முருகா என்று இயற்கையாகவே உயரமும் ஆகிருதியும் படைத்தவர்கள். தவிர கடும் உழைப்பின் மூலம் உடலைக் கல்லாக வைத்திருப்பவர்கள். காடு மேடு வெயில் மழை குளிர் என்று எதையும் பொருட்படுத்தாத இயல்பினைக் கொண்டவர்கள். அவர்களிடம் இல்லாதது ஒன்றுதான். முறையான கல்வி அறிவு. அதில் கணிசமான அளவு குறைபாடு இருந்தது. ஓரளவு படித்த பழங்குடி இனத்தவர்களைத் தேடித் திரட்டுவதே பெரும்பணி.
சிக்கல் என்னவென்றால் அப்படி ஓரளவு படித்தவர்கள்கூட பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர முன்வர மாட்டார்கள். அவர்கள் சுதந்தர பலூசிஸ்தான் இயக்கங்களுடன் சேரப் போய்விடுவார்கள்.









Add Comment