உலகம் எப்படிப் பார்க்கிறது?
ஜப்பானில் சுனாமி மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. உலகம் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தது. அமெரிக்காவும் குலுக்கல் முறையில் “தீவிரவாத எச்சரிக்கை இன்று: சிவப்பு, மஞ்சள், பச்சை” என்று சொல்வதை எல்லாம் நிறுத்தியிருந்தது. தொழிலாளர்கள் தினத்தை உலக மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த நாள். திடீரென்று தொலைக்காட்சியில் அவசரச் செய்தியாக வந்த அறிவிப்பு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. அது, ஒசாமா பின்லேடனின் மரணச் செய்தி. திரைமறைவில் அமெரிக்க உளவுத்துறை இடையறாது செய்துகொண்டிருந்த பணிகள் திரைக்கு முன் வந்த நாள் அது.
மே 1. பாகிஸ்தான் நேரம் அதிகாலை 1:00 மணி. அமெரிக்க நேரம், மாலை 4:00 மணி. பத்து ஆண்டுகாலத் தேடலுக்குப் பிறகு ஒபாமாவின் நேரடி உத்தரவின் பேரில் 23 நேவி சீல் வீரர்கள் இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களில் பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் உள்ள ஒரு கட்டடத்தைச் சுற்றி வளைத்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பெயர் ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர். தொழில்நுட்பப் பிரச்சனையால் ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. ஆனால் யாரும் பாதிக்கப்படவில்லை. 40 நிமிட நாடகத்தின் இறுதியில் ஒசாமா பின்லேடனும் அவருடன் இருந்த நான்கு பேரும் கொல்லப்பட்டனர். எந்த அமெரிக்க வீரரும் பாதிக்கப்படவில்லை. ஒசாமாவின் உடல் 24 மணிநேரத்திற்குள் கடலில் அடக்கம் செய்யப்பட்டது.
மே 1ஆம் தேதி இரவு, அமெரிக்க நேரம் 11:35 மணிக்கு ஒபாமா வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் இருந்து தேசத்திற்கு உரையாற்றினார். ஒசாமாவின் மரணச் செய்தியை அறிவித்தார்.















Add Comment