44. உடைக்கும் கலை
வாய்ப்புகள் இருந்தும் வளர்ச்சி அடையாத நாடு எதை வேண்டுமானாலும் எடுத்து வைத்துக்கொண்டு ஒரு பகுப்பாய்வு செய்து பாருங்கள். அவர்கள் வளர்ச்சியடையாமல் இருப்பதற்குக் கல்வியின் போதாமை அடிப்படைக் காரணமாக இருக்கும். கல்வி, போதாத நிலையிலேயே நீடிப்பதற்கு சாதி, இனம், மதம் போன்ற குறுங்குழுக் கூறுகள் மேலோங்கியிருப்பது காரணமாக இருக்கும். இந்தக் குறுங்குழு மனப்பான்மை எப்போதும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதை அந்நாட்டின் அரசியல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருக்கும். அது இல்லையேல் நமக்குப் பிழைப்பில்லை என்றே அந்நாட்டு அரசியல்வாதிகள் நினைப்பார்கள். அவர்கள் பிழைப்பின் பொருட்டு மொத்த நாட்டையும் எப்போதும் வளரா நிலையில் வைத்துப் பராமரித்துக்கொண்டிருப்பார்கள். பிராந்திய வித்தியாசங்களே கிடையாது. உலகெங்கும் இதுதான். காலம்தோறும் இப்படித்தான். ஒன்றும் செய்ய முடியாது.
பலூசிஸ்தான் மக்களைப் பொறுத்த அளவில் அவர்களது தேசிய தாகம் அப்பழுக்கற்றது. உயிரே போனாலும் பாகிஸ்தானுக்குள் ஒரு மாநிலமாக இருக்க முடியாது; அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு வால் பிடித்துக்கொண்டு வாழ முடியாது என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. தமது சுதந்தர நிலையை மீட்கவும் தக்க வைத்துக்கொள்ளவும் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சரித்திரத்தில் எப்போதெல்லாம் உருப்படியாக ஒரு தலைவன் கிடைக்கிறானோ, அப்போதெல்லாம் அவர்கள் தமது இனக்குழுப் பகையுணர்ச்சிகளை மறந்துவிட்டு ஒன்றுகூடியிருக்கிறார்கள். பொது எதிரி முக்கியம். அவனை ஒழிப்பது முக்கியம். நாம் நாளைக்கு நிதானமாகப் பேசி, சண்டை போட்டு அடித்துக்கொண்டு சாகலாம். இன்றைக்கு அவனைக் கவனிப்போம் என்றுதான் நினைப்பார்கள். இதனால்தான் ஷெர் முஹம்மது மர்ரியின் காலம் வரை அவர்கள் தமக்குள் இருந்த குழுப் பகையை மறந்து ஒன்று சேர்ந்திருந்தார்கள்.
அதைத்தான் புட்டோ உடைக்க விரும்பினார். புட்டோ என்றில்லை. பாகிஸ்தானின் அதிகார வர்க்கம் காலம்தோறும் அதைத்தான் செய்து வந்திருக்கிறது. புட்டோ அதனைச் சிறிது திட்டமிட்டு, வெற்றிகரமாகச் சாதித்தார்; அவ்வளவுதான். பங்களாதேஷ் யுத்தத்தின் பொருட்டு யாஹியா கான் சிறைப்பட்டிருந்த பலூச்சி இனத் தலைவர்களை விடுவித்தார், தனி மாநில அந்தஸ்தைத் திருப்பிக் கொடுத்தார், பொது மன்னிப்பு வழங்கினார்; அதெல்லாம் சரி. ஆனால் அதனாலேயே பாகிஸ்தான் திருந்திவிட்டது என்று எடுத்துக்கொண்டுவிடக் கூடாது. யாஹியா போய் புட்டோ வந்த மறு வருடமே அனைத்துத் தலைவர்களும் முறைப்படி கைது செய்யப்பட்டு உள்ளே வைக்கப்பட்டனர்.










Add Comment