54. கூட்டுக் களவாணிகள்
முகமூடி அணிந்து, ஒரு திருடனைப் போல டாக்டர் ஷாஜியாவின் வீட்டுக்குள் புகுந்து தாக்கியது-பாலியல் பலாத்காரம் செய்தது, ஒரு ராணுவ அதிகாரி. இன்னொரு பெண்ணாக இருந்தால் அந்தளவு தாக்குதலுக்கு மிக நிச்சயமாக மயங்கி விழுந்திருப்பார் அல்லது இறந்தேகூடப் போயிருக்கலாம். ஆனால், டாக்டர் ஷாஜியா தனது மொத்த பலத்தையும் திரட்டி, கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு, அந்தக் குற்றவாளியிடமிருந்தும் தப்பித்து சத்தமிட்டபடியே வீட்டை விட்டு வெளியே ஓடினார்.
நள்ளிரவுப் பொழுது. அவர் தங்கியிருந்த குவார்ட்டர்ஸுக்கு அருகே இருந்த ஒரே பாதுகாப்பான இடம் மருத்துவமனைதான். எனவே அவர் அங்கே ஓடினார். அங்கிருந்த நர்ஸிடம் விவரம் சொல்லித் தன்னைக் காப்பாற்ற உதவும்படிக் கேட்டார். அந்த நர்ஸ், பாகிஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு போன் செய்து விவரம் சொன்னார். அவர்கள் பரபரப்பாகி, உடனே மருத்துவமனையில் இருந்த டூட்டி டாக்டர்களுக்கு விவரம் சொல்லி, ஷாஜியாவுக்குச் சிகிச்சை அளிக்கச் சொன்னார்கள்.
சிகிச்சையெல்லாம் பிறகு; முதலில் லிபியா சென்றிருக்கும் என் கணவருக்குத் தகவல் சொல்லுங்கள். என் குடும்பத்தாரை உடனே இங்கே வரவழையுங்கள் என்று ஷாஜியா சொன்னார். அவர்கள் கேட்கவில்லை. சிகிச்சையே முக்கியம் என்று சொல்லி, ஓர் அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்து ஊசி போட்டார்கள். இது என்ன இஞ்செக்ஷன் என்று ஷாஜியா கேட்டதற்கு பதில் இல்லை. ஆனால் அவர் மூன்று நாள் கண்ணே திறக்காமல் தூங்குவதற்கு அந்த இஞ்செக்ஷன் உதவியது. அம்மருத்துவமனையில் இறுதிவரை அவருக்கு வேறெந்த சிகிச்சையும் செய்யப்படவில்லை. மூன்று நாள்களுக்குப் பிறகு அவரை கராச்சியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு இடம் மாற்றினார்கள்.










Add Comment