53. வெறியாட்டம்
அடிப்படையில் பாகிஸ்தான், தீவிரவாத மனோபாவம் கொண்ட நாடு. அதாவது, அரசியல்வாதிகள் அவர்களது துறையில் உக்கிரமாக இருப்பார்கள். ராணுவம் தன் பணியில் அதி உக்கிரமாக இருக்கும். உளவுத் துறை இன்னொரு உக்கிரம். இருக்கவே இருக்கிறார்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த முழுநேரத் தீவிரவாதிகள். இத்தனை தீவிரர்களுக்கு நடுவே பலூசிஸ்தான், வடமேற்கு எல்லை மாகாண விடுதலை இயக்கத்தினரின் குரலெல்லாம் ஓங்கி ஒலிப்பது எப்போதுமே சாத்தியமானதல்ல. கதவிடுக்கில் சிக்கிக்கொண்ட பல்லியின் குரலைப் போல அவர்களது குரல் கேட்கத் தொடங்கினாலே குரல் வளையை நசுக்கிவிடுவார்கள். இதில் இன்னொரு துயரம் என்னவென்றால், பாகிஸ்தானை ஒரு தீவிரவாத நாடு என்று எங்காவது யாராவது சொல்ல ஆரம்பித்தால், இல்லவேயில்லை; நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள் என்று காட்டிக்கொள்வதற்காக உடனே பலூசிஸ்தானில் ராணுவத்தைக் கொண்டு குவித்துப் பிரிவினைவாதம் பேசுவோரை ஒடுக்கி வைக்கிறோம் என்று ஆரம்பித்துவிடுவார்கள்.
பல திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஒரு வழக்கை உடனே முடிக்க வேண்டும் என்றாலோ, ஏதாவதொரு வழக்கில் உடனடியாக யாரையாவது கைது செய்ய வேண்டி வந்தாலோ, கைவசம் உள்ள குற்றவாளிகளின் பட்டியலில் இருந்து சிலரைத் தேர்ந்தெடுத்துப் போய்க் கைது செய்து ஸ்டேஷனில் வைத்துவிடுவார்கள். உண்மையில் சம்பந்தப்பட்ட குற்றத்துக்கும் அவருக்கும் தொடர்பே இருக்காது. கணக்குக் காட்டத்தான் இது நடக்கிறது என்று அவர்களுக்கும் தெரிந்தே இருக்கும். தலையெழுத்தே என்று உடன்பட்டுத் தொலைப்பார்கள். இப்படியாக அவர்கள் நிரந்தரக் குற்றவாளிகளாக்கப்பட்டுவிடுவார்கள்.
அமெரிக்காவின் ஆப்கன் படையெடுப்பின்போது தானும் அமெரிக்காவைப் போலத் தீவிரவாத எதிர்ப்பில் தீவிரமாக இருக்கிறேன் என்று காட்டிக்கொள்வதற்காக பலூசிஸ்தானில் ராணுவத்தைக் கொண்டு குவித்தார் முஷாரஃப். ஒரு விதத்தில் இதற்கு அமெரிக்காவும் காரணம். அதை மறுக்க இயலாது.











Add Comment