73. பிடித்து வைத்த பிள்ளையார்
இந்தியாவின் குறைகள் என்று பட்டியலிட ஆயிரமாயிரம் விஷயங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கலாம். ஆனால் வளராத, வளர்ந்துகொண்டிருக்கும், கிட்டத்தட்ட வளர்ந்துவிட்ட பிற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவை எதுவுமே ஒரு பொருட்டில்லை என்று தோன்றும். வம்புச் சண்டைகள் கிடையாது. வலுச்சண்டைகள் ஆகாது. பெரிய பஞ்சம், பேரழிவுகள், பசி-பட்டினிச் சாவுகள், ராணுவ ஆட்சி, அராஜகமான சம்பவங்கள், இனப்படுகொலைகள், உள்நாட்டு யுத்தம் என்று மொத்த நாட்டையும் பாதிக்கும்படியான பேரழிவுச் சம்பவங்கள் இந்தியாவில் இராது. ஜனநாயகத்தின் கட்டமைப்பிலேயே உள்ள இயல்பான ஓட்டைகளைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் உள்ளேயும் வெளியேயும் அவ்வப்போது ஆனந்த அல்லது உக்கிர தாண்டவம் ஆடிக்காட்டுவார்கள். ஆங்காங்கே அசம்பாவிதங்களும் நடக்கும்தான். ஆனால் எது ஒன்றும் மொத்த மக்களையும் பாதிக்காது. பகுதியளவு பாதிப்புகளைப் போகிற வழியில் சரி செய்துகொண்டு போய்விடுவது நம் வழக்கம்.
இதற்கு இரண்டு காரணங்கள் மிகவும் முக்கியமானவை. முதலாவது, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. எதை அடக்கி வைத்தால் எல்லாம் சரியாக இருக்குமோ, அரசியல் சாசனத்தை அமைத்தவர்கள் அதை முதலில் செய்து வைத்தார்கள். இரண்டாவது காரணம், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகள். தொடக்கம் முதலே ஒரு பொறுப்பு மிக்க சர்வதேச சக்தியாக இந்தியா தன்னைக் கட்டமைத்து வந்திருக்கிறது. அண்டை நாடுகளின் உள்விவகாரங்களில் பகிரங்கமாகத் தலையிடும் வழக்கம் (பங்களாதேஷ், இலங்கை விவகாரங்கள் நீங்கலாக) இந்தியாவுக்கு இருந்ததில்லை.
சிறிது எண்ணிப் பார்க்கலாம். இந்தியா தனது வழக்கத்தை மீறித் தலையிட்ட மேற்சொன்ன இரண்டு தருணங்களின் தொடர்ச்சியாக அடைந்த இழப்புகள் அதிகம். முதலாவதில், பாகிஸ்தானுடனான நிரந்தரப் பகை ஏற்பட்டு நிலைத்தது. அடுத்ததில் ஒரு பெரிய தலைவரை, முன்னாள் பிரதமரையே பலி கொடுக்க வேண்டி இருந்தது. இவற்றை விபத்துகள் என்று எடுத்துக்கொள்வோமானால், நாமே தேடிக்கொண்ட இத்தகைய கோர விபத்துகள் இந்திய சரித்திரத்தில் வேறெங்கும் அதிகம் இராது.










Add Comment