74. எது வழி?
Operation Herof என்கிற பெயரில் ஆகஸ்ட் 2024 இல் BLA தனது தாக்குதலைத் தொடங்கியபோது, பிறகு அதை இறுதித் தாக்குதலாக அறிவிக்க நேரிடும் என்று எண்ணியிருக்கவில்லை. மே 2025 இல் Operation Herof 2.0 என்று குறிப்பிட்டு அதே தாக்குதல்களை இன்னும் தீவிரப்படுத்தினார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் எழுபத்தைந்து தாக்குதல்களை ஒரே சமயத்தில் நடத்தியபோது அவர்களுக்குச் சில வெற்றிகள் கிடைத்தன. இதற்கு முன் நடக்காத விதமாகச் சில கிராமங்கள், சிறு நகரங்கள் அவர்கள் வசமாயின. பல இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றார்கள். நான்கைந்து முறை பாகிஸ்தானின் மிக முக்கியமான பல தேசிய நெடுஞ்சாலைகளைப் பல மணி நேரம் அடைத்து வைத்தார்கள். இருப்புப் பாதைகளில் ரயில் வண்டிகளை இயக்கலாமா, காலவரையறையில்லாமல் ரயில் போக்குவரத்தை மூடி வைக்கலாமா என்று அரசு சிந்திக்கும் அளவுக்கு ஒரு முழு ஆட்டம் ஆடித் தீர்த்திருந்தார்கள்.
மே 9 ஆம் தேதி இரவு பலூசிஸ்தான் சுதந்தரம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதை எழுபத்தெட்டு ஆண்டுக் கால அடக்குமுறைக்குத் தாங்கள் அளிக்கும் இறுதி பதில் என்று பலூச்சிகள் எண்ணினார்கள். மாநிலம் முழுவதும் அவர்கள் தமது தேசியக் கொடிகளை ஏற்றினார்கள். அரசு அலுவலகங்கள், பொதுக் கட்டடங்கள், வீடுகளின் கூரைகள் உள்பட எங்கெங்கும் பலூச்சி தேசிய கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. பேருந்துகள், ரயில்கள், லாரிகள் என்று எங்கே எந்த வண்டி போவதைப் பார்த்தாலும் குறுக்கே சென்று நிறுத்தி, மேலே ஏறிக் கொடியைக் கட்டி, மிட்டாய் கொடுத்து வாழ்த்தி அனுப்பினார்கள்.
மறுபுறம் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தவண்ணம், பாகிஸ்தானில் இருந்து புலம் பெயர்ந்து மேற்கு நாடுகளுக்குச் சென்றுவிட்டிருந்த பலூச்சிகள் எக்ஸ் தளத்தில் மிர் யார் பலோச் மூலம் அறிவிக்கப்பட்ட பலூசிஸ்தான் சுதந்தரப் பிரகடனத்தை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொண்டே இருந்தார்கள். 2011 ஆம் ஆண்டு அரபு வசந்தப் புரட்சிகளின் தொடக்கம் எப்படி ட்விட்டர் வழியே தொடர்ச்சியாக உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டதோ, அதே போல பலூசிஸ்தான் விடுதலையும் உலக மக்களின் கவனத்தில் சென்று சேர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். பலூசிஸ்தான் தேசியக் கொடி, பலூசிஸ்தான் நாடாளுமன்றம், பலூசிஸ்தான் ஏர்லைன்ஸ், பலூசிஸ்தான் பாஸ்போர்ட், பலூசிஸ்தான் நாணயம் என்று ஒரு தனி நாட்டின் அடையாளங்களாக என்னென்ன தேவைப்படுமோ அனைத்தையும் அன்றே, அக்கணமே அறிவித்தார்கள். புதிய பலூசிஸ்தான் குடியரசு பிறந்துவிட்டது; இதனை ஓர் இறையாண்மை உள்ள நாடாக உலகம் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்று மிர் யார் பலோச் தனது அறிவிப்பில் வேண்டுகோள் விடுத்திருந்தார். பலூசிஸ்தான் குறித்து இதுவரை பாகிஸ்தான் சொல்லியிருக்கும் எந்தக் கதையும் உண்மையல்ல, அதை நம்பாதீர்கள் என்று திரும்பத் திரும்ப பலூச்சிகள் எக்ஸ் தளத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்தியாவின் ஆதரவைக் கோரி, ஐநாவின் அமைதிப்படையை பலூசிஸ்தானுக்கு அனுப்பக் கோரி, சாத்தியமுள்ள அனைத்து விதமான வேண்டுகோள்களையும் அனைத்துத் தரப்பினருக்கும் செவ்வனே அனுப்பி வைத்தார்கள்.











Add Comment