ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது. இப்போட்டியில் இங்கிலாந்தை விட அநாயாசமாக பாஸ்பாலை நிகழ்த்திக் காட்டியது ஆஸ்திரேலியா. தற்காலிகக் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் வியூகங்களும் சிறப்பாக இருந்தன. பாட் கம்மின்ஸின் வருகை தாமதமானாலும், அது குறித்த கவலை அணிக்குத் தேவையில்லையென்பதை ஸ்மித் நிரூபித்திருக்கிறார்.
ஆனால் இந்தப் போட்டியின் முடிவை மட்டும் வைத்துக் கொண்டு, இங்கிலாந்தை மதிப்பிட முடியாது. அவர்கள் மீண்டு வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் திறந்தே இருக்கின்றன. 2023 ஆஷஸ் தொடரையும் இதேபோல மோசமாகத் தொடங்கிய இங்கிலாந்து, முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்றிருந்தது. ஆனால் அடுத்த மூன்று போட்டிகளில் மீண்டெழுந்தவர்கள், இரண்டில் வென்று 2-2 என்று தொடரைச் சமன் செய்தனர். அதனால் நாம் கொஞ்சம் பொறுத்திருப்பதில் தவறில்லை.
இங்கிலாந்துக்கு இது வெறும் தொடர் மட்டுமல்ல. அவர்களின் இழந்த பெருமையை மீட்டெடுப்பதற்கான சமரும் கூட. ஏனெனில் 2015க்குப் பிறகு நடந்த நான்கு தொடர்களிலும் இங்கிலாந்தால் ஆஷஸ் கோப்பையைக் கைப்பற்ற முடியவில்லை. இருமுறை தொடர் டிரா ஆகியிருந்தாலும், ஆஷஸ் விதிப்படி முந்தைய சாம்பியன் அணியே கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும். அதுபோல 2011க்கு பிறகு, ஆஸ்திரேலிய மண்ணில் எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்து வெற்றி பெறவில்லை.















Add Comment