அலாஸ்காவின் முக்கியமான நகரான பேர்பாங்க்ஸ் என்ற இடத்திலிருந்து சுமார் அறுபது மைல் தள்ளி உள்ளது செனா வெந்நீர் ஊற்று (chena hot springs). நூறு வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இடம் சுற்றுலாவை விரும்பும் அமெரிக்கர்கள் ஒவ்வொருவரின் பக்கெட் லிஸ்ட்டிலும் உள்ளது.
அமெரிக்காவுடன் கூட்டுக் குடும்பமாக இல்லாமல், தனிக் கட்டையாக உள்ள மாநிலம் அலாஸ்கா. இந்தத் தனிக்கட்டைக்குப் பின்னே ஒரு வரலாறு இல்லாமல் இல்லை. அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவை 1867இல் வாங்கியது. காசை கொடுத்து வாங்கிவிட்டால், அமெரிக்க நிலப்பரப்புடன் தானாக ஒட்டிக்கொள்ளுமா என்ன. தன்னந்தனியாக கனடாவுக்கும் ரஷ்யாவுக்கும் நடுவில் உள்ளது அலாஸ்கா.
வெளியில் மைனஸ் இருபது டிகிரி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனிமூட்டம். திட்டு திட்டாகக் குன்றுகள், மலைகள். அதன் மேல் பனிக் கிரீடம். வெள்ளை நிறத்துக்கு இதை விட நல்ல உதாரணம் இருக்க முடியாது. இந்தப் பனிப் போர்வைகளின் நடுவில் ஒரு சிறிய குளம். இந்தக் குளமும் பனிக்கட்டியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பே. ஆனால் குளத்தில் மக்கள் மெல்லிய நீச்சல் ஆடையில் கும்மாளம் போடுகிறார்கள்.
Add Comment