டெம்பிள் ரன் விளையாட்டு ஞாபகம் இருக்கிறதா? எதிரி பின்னால் துரத்தத் திரையில் புதிது புதிதாக முளைக்கும் பாதையில் நாம் வேகமாக ஓடிக்கொண்டே இருப்போமே? இப்படியொரு பாதை கடல் நீரின் மேல் முளைத்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் உலகிலேயே முதல்முறையாக உருவாக்கியிருக்கிறது சீனா.
தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் கடல் தளங்கள் இவை. கடலுக்கு மேலே உறுதியான பாலம் போன்ற இவை பார்ஜஸ் எனப்படுகின்றன. கடற்கரையிலிருந்து ஒரு சரிவுப்பாதை முதல் பாலத்துடன் இணைகிறது. இதேபோல இன்னும் இரண்டு பாதைகளும் பாலங்களும் எனக் கடலுக்குள் எண்ணூறு மீ தொலைவுக்கு நீள்கிறது. ஹைட்ராலிக் கால்களை உடைய இவை சிலந்திகளைப் போலக் கால்களில் அழுத்தம் கொடுத்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகரமுடியும். கடலுக்குள் தேவையான இடங்களுக்கு இவற்றைக் கொண்டு சென்று ஆங்காங்கே நிறுத்தி வைக்கவும் முடியும்.
எண்ணெய் அல்லது எரிவாயுவை ஆழமற்ற கடல் பகுதிகளிலிருந்து துளையிட்டு எடுக்கும் ஜாக்-அப் ரிக் போன்ற தொழில்நுட்பம் இது. ஹைட்ராலிக் கால்களைக் கொண்ட ரிக் கடல்மட்டத்துக்கு மேலே எழும்ப முடிந்தாலும், தானாகச் செயல்பட முடியாதவை. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இவற்றை மாற்றுவதும் சுலபமல்ல. இதிலிருந்து உருவான இந்த பார்ஜஸ் இந்த சவால்களை வென்று டெம்பிள் ரன்னில் திடீரெனத் தோன்றும் நகரும் பாலங்களை உண்மையாக்கிவிட்டது.
இதை உருவாக்கியிருப்பது தென் சீனாவிலிருக்கும் COMEC நிறுவனம். ஏற்கெனவே சீனக் கடற்படைக்கு இது பக்கபலமாக இருந்து வருகிறது. ரோந்தில் ஈடுபட்டிருக்கும் பெரிய கப்பல்களுக்கும் நீர்மூழ்கிகளுக்கும் எரிவாயு, மருத்துவ உதவிகள் அளிக்கும் துணைக் கப்பல்களைத் தயாரிக்கிறது. ட்ரோன்களுக்கும் ஹெலிகாப்டர்களுக்கும் புறப்பாடு தளங்கள் என நவீன படைக்குத் தேவையான தொழில்நுட்ப புதுமைகளை உருவாக்கி வருகிறது.
Add Comment