‘கிரிட்டோ’ (Grito) என்றால் ஸ்பானிய மொழியில் காதைக் கிழிக்கும் சத்தம் போடுவது என்று அர்த்தம். சுதந்தர தினத்தின் முந்தைய நாளன்று மெக்ஸிகோவின் அதிபர், மக்கள் முன் கோஷம் எழுப்புவது வழக்கம். இந்த நிகழ்வை கிரிட்டோ என்று அழைப்பார்கள். மெக்ஸிகோ சுதந்தரம் பெற்று இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கிரிட்டோவும் ஒவ்வொரு முறையும் செய்யும் சடங்குதான். இருந்தும் சென்ற வாரம் நடைபெற்ற சுதந்தர விழாவின் ‘கிரிட்டோ’ வானுக்கே கேட்கும் அளவுக்குச் சத்தமாக இருந்தது. அதற்குக் காரணம் க்லாட்டியா ஷெயின்பௌம் என்ற மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர்.
இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்து எழுபத்தெட்டு ஆண்டுகளே ஆகியுள்ளன. அதற்குள்ளாகவே நாம் பெண் பிரதமர், பெண் குடியரசுத் தலைவரையெல்லாம் பார்த்துவிட்டோம். இருநூறு வருடங்கள் முன் சுதந்தரம் கிடைத்த ஒரு நாட்டுக்கு இப்போதுதான் முதல் முறையாக ஒரு பெண் அதிபரா என்று நமக்கு வியப்பாக இருக்கலாம். அதோடு சேர்த்து ஒரு சுவாரசியத் தகவல். மெக்ஸிகோவுக்காவது ஒரு பெண் அதிபர் வந்துவிட்டார். 249 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்தரம் பெற்ற, வளர்ந்த நாடு என்று சொல்லப் படுகிற அமெரிக்காவில் இன்று வரை இப்படியொரு சரித்திரம் நிகழவில்லை. ஆனால் இந்தியாவை இவர்கள் வளர்ந்து வரும் நாடு என்கிறார்கள்!














Add Comment