கடந்த ஒரு மாதமாக இ-சேவை இணையத்தளம் சரியாக வேலை செய்யவில்லை. பெரும்பாலான நேரங்களில் முடங்கியுள்ளது. சான்றிதழ்கள் விண்ணப்பிக்கவும் பதிவிறக்கம் செய்யவும் இயலவில்லை. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான ஒரு சில நாள்களிலிருந்து இ-சேவை இணையத்தளம் தொடர்ச்சியாக இயங்கவில்லை. உயர்கல்விக்கு அடுத்து விண்ணப்பிக்க வருமான, சாதி, இருப்பிட, முதல் பட்டதாரிச் சான்றிதழ்கள் அவசியம். இ-சேவை மையம் மூலம் மட்டுமே இவற்றை விண்ணப்பிக்க இயலும். இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் தவித்துப் போயுள்ளனர்.
2014ஆம் ஆண்டு தமிழகத்தில் இ-சேவை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இ-சேவை மையத்தைத் தொடங்கிவைத்தார். சொத்து வரி, மின், குடி நீர், கழிவு நீர்க் கட்டணங்கள் செலுத்துவது போன்ற குறிப்பிட்ட சேவைகளை மட்டும் இ-சேவை மையங்கள் ஆரம்பத்தில் வழங்கின. பின்னர் வட்டாட்சி, வருவாய், வேளாண்மைத் துறை சேவைகளும் இ-சேவை மையங்களில் இணைக்கப்பட்டன. பிறப்பு, இறப்புச் சான்றிதழ் முதல் வாரிசு உரிமை, பட்டா மாறுதல் சான்றிதழ் வரை இ-சேவை இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது இருநூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இந்தச் சேவை மையங்கள் மூலம் மட்டுமே பெறப்படுகின்றன. சான்றிதழ்களும் இ-சேவை மையங்கள் மூலமே தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதனால் இரண்டு நன்மைகள் உள்ளன. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்குத் தொலைதூரம் பயணம் செய்து, சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. அருகிலிருக்கும் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். பொதுமக்களிடம் நேரடியாக விண்ணப்பங்களைப் பெறுவது அரசு ஊழியர்களுக்குச் சிரமம். சேவைகளை விரைவாக வழங்க இயலாது. இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பங்கள் சென்றுவிடும். அவர்கள் ஆன்லைன் மூலம் அவர்களுடைய லாகினில் சான்றுகளைச் சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார்கள். தேவைப்பட்டால் அடுத்து அந்த விண்ணப்பம் அவர்களுடைய உயரதிகாரிகளுக்குச் செல்லும். ஆன்லைனில் சரிபார்த்து அவர்களும் ஒப்புதல் அளித்துவிடுவார்கள். பொதுமக்கள் அந்தச் சான்றிதழ்களை அருகிலுள்ள இ-சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.













Add Comment