இந்திய மாணவர் பாலக் பனீரைச் சூடுபடுத்துவதை எதிர்த்த அமெரிக்கப் பல்கலைக்கழகம், சட்டப் போராட்டத்துக்குப் பணிந்து இரண்டு லட்சம் டாலர்களை இழப்பீடாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ‘நாய்களும் இந்தியர்களும்’ என்ற மனப்பான்மையை வெளிப்படுத்தும் உணவுசார் பாகுபாட்டுக்கு எதிராகக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த ஆதித்ய பிரகாஷும் அவரது காதலியான ஊர்மி பட்டாச்சார்யாவும் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த ஆராய்ச்சி மாணவர்கள். ஒரு நாள், மதிய உணவுக்குத் தாங்கள் கொண்டுவந்த பாலக் பனீரை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்தியுள்ளார் ஆதித்யா. அது மோசமான வாடையை வெளிப்படுத்துவதாக ஓர் ஆசிரியை ஆட்சேபணை எழுப்பியுள்ளார். அதுதான் பிரச்சினையின் தொடக்கப்புள்ளி. அதன் விளைவாக, கொலராடோ பல்கலைக்கழகம் இரண்டு லட்சம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபாயை அவர்களுக்கு இழப்பீடாகக் கொடுக்கவேண்டி வந்துள்ளது.
‘ஓர் உணவின் வாடையைக் குறித்து ஆட்சேபம் எழுப்பியதற்காகவா இந்தச் சட்டப் போராட்டமும் இரண்டு லட்சம் டாலர் அபராதமும்?’ என்போருக்கு, ‘ஒருபோதும் இல்லை’ எனப் பதிலளிக்கிறார் ஆதித்யா. ‘இது உணவின் மீதுள்ள பற்றாலோ பணத்துக்காகவோ அல்ல. இந்தியர்களின் கௌரவத்துக்காக’ என்கிறார் அவர். 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அந்தச் சம்பவத்தையும் அதன் தொடர் விளைவுகளையும் அவர் விவரித்துள்ளார்.















Add Comment