இந்தியாவின் இருபத்தாறாவது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார் ஞானேஷ்குமார். ஆறு ஆண்டுகளுக்கு, தேர்தல் ஆணையத்தின் முகமாக இவர் இருக்கப்போகிறார். இதற்குமுன் இவர் இரண்டு தேர்தல் ஆணையர்களுள் ஒருவராக இருந்தார். இவரது பதவியேற்பினால் காலியான ஒரு தேர்தல் ஆணையரின் இடத்துக்கு விவேக் ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விவேக் ஜோஷி தற்போது ஹரியானாவின் தலைமைச் செயலாளராக உள்ளார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘பிரதமரும் உள்துறை அமைச்சரும் எடுத்துள்ள இந்த முடிவு அறமற்றது. அவர்கள் வகிக்கும் பதவிகளுக்கு இது அழகல்ல. மோடி அரசானது, நமது தேர்தல் நடைமுறைகளின் நேர்மை மீது, கோடிக்கணக்கான மக்களைக் கவலை கொள்ளச்செய்துள்ளது’ என்ற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி. அதற்குக் காரணமில்லாமல் இல்லை.
2023க்கு முன், தேர்தல் ஆணையர்களைத் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தது மத்திய அரசு. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அனூப் பரன்வால். இவர் ஒரு சட்ட மாணவர். அந்த ஆண்டின் மார்ச் இரண்டாம் தேதி, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதன்படி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர்களைக்கொண்ட உயர்நிலைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும். அக்குழு, தேர்தல் ஆணையர்களைக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கவேண்டும்.
Add Comment