சென்னையின் பழமையான சந்தைகளுள் ஒன்று ஜாம் பஜார். இந்த வார்த்தையைக் கேட்டதும் ”ஜாம் பஜார் ஜக்கு, நான் சைதாப்பேட்டை கொக்கு” என்ற மனோரமாவின் பாடல் உங்கள் நினைவிற்கு வருகிறதுதானே..? அதை முணுமுணுத்துக்கொண்டே வாருங்கள்… ஜாம் பஜாரைச் சுற்றிப் பார்ப்போம்.
திருவல்லிக்கேணி பாரதி சாலையில் அமைந்துள்ளது இந்த மார்க்கெட். பாரதி சாலையின் நுழைவாயிலில் பூக்கடைகள் மாலைகட்டி நம்மை வரவேற்கும். பாரதி சாலை என்ற பெயர்ப் பலகையைப் பார்த்துக் குழப்பமடைந்து, “ஜாம் பஜார் எது?” என்று கேட்டால், “இதிலிருந்து ஆரம்பித்து ஜாம்பஜார் காவல் நிலையம் வரை ஜாம் பஜார் தான்” என்றார்கள்.
இந்த பாரதி சாலையில் இரண்டு கோழிக்கறிக் கடைகளுக்கு நடுவே தேங்காய் வாழைப்பழ கடையைப் பார்க்க முடிகிறது. அதில்லாமல் காய்கறிக் கடைகள், பழங்கள், மளிகை பொருட்கள், பாத்திரங்கள் என வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கக் கூடிய ஒரு தெருவாக இருக்கிறது. எளிய மக்கள் சாலையோர கடைகளை விரித்திருந்தனர். அவற்றில் வாழைப்பழம் முதல் டீ கப் வரை எல்லாம் இருந்தன. சாலையில் ஆங்காங்கே கோழிகளை இறக்கிய அடையாளங்கள் தென்பட்டன. அவற்றின் உடைந்த இறகுகளும் கழிவு கரைகளுமாக இருந்தன.
Add Comment