மரியா லூயிஸா பொம்பால்
ஆங்கிலத்தில்: Rosalie Torres-Rioseco
தமிழில்: ஆர். சிவகுமார்
பியானோ வாசிப்பவர் உட்கார்ந்தபிறகு கொஞ்சம் செயற்கையாக இருமிவிட்டு ஒரு கணம் தீர்க்கமாக மனதை ஒருமுகப்படுத்துகிறார். ஓர் இசை வரியின் அலகு ஒன்று அரங்கத்தின் மௌனத்தைக் கலைத்து எழத்துவங்கி தெளிவாகவும் நிதானத்துடனும் பண்பட்ட மாற்றங்களுடனும் பெருக ஆரம்பித்தபோது பிரகாசமான விளக்குகள் மென்மையும் ரம்மியமும் கலந்த வெளிச்சத்துக்குக் குறைகின்றன. ‘‘மொஸார்ட்டாக இருக்கலாம்,’’ என்று ப்ரிஜிதா நினைக்கிறாள். வழக்கம்போலவே நிகழ்ச்சி நிரலைக் கேட்டுவாங்க மறந்துவிட்டாள். ‘‘மொஸார்ட் அல்லது ஸ்கார்லட்டியாக இருக்கலாம்’’. அவளுக்கிருந்த இசையறிவு எவ்வளவு குறைவு! அவளுக்கு இசையில் ஈடுபாடோ, ஆர்வமோ இல்லை என்று அதற்கு அர்த்தமில்லை. குழந்தையாக இருந்தபோதே தனக்கு பியானோ சொல்லித்தரப்படவேண்டுமென்று வற்புறுத்தியவள்தான் அவள். அவளுடைய சகோதரிகளுக்கு செய்ததுபோல யாரும் இசையை அவள்மீது திணிக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனாலும், அவளுடைய சகோதரிகள் தற்போது பியானோவை இசைக்குறியீடுகளைப் பார்த்த மாத்திரத்தில் சரியாக வாசிக்கச் செய்கிறார்கள். ஆனால், இவளோ இசைப்பயிற்சியை ஆரம்பித்த வருடத்திலேயே நிறுத்திவிட்டாள். அவளுடைய சீரற்ற பயிற்சிக்கான காரணம் எவ்வளவு எளிதானதோ அவ்வளவு அவமானகரமானதும்கூட. ‘F’ ஸ்வரக்கட்டையைக் கையாள அவளால் கற்றுக்கொள்ளவே முடியவில்லை; எப்போதுமே முடியவில்லை. ‘‘என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை;என்னுடைய ஞாபகம் ‘G’ ஸ்வரக்கட்டைக்குத்தான் போகிறது.’’ அவளுடைய அப்பா எவ்வளவு வெறுப்பும் கோபமும் அடைந்தார்! “இத்தனை மகள்களை தன்னந்தனி ஆளாக வளர்க்கும் வேலையை நான் வேறு யாருக்காவது கொடுக்க முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! பாவம் கார்மன். ப்ரிஜிதாவால் அவள் நிச்சயம் துன்பப்பட்டிருப்பாள். மனவளர்ச்சி குறைந்த குழந்தைதான் இவள்.’’
Add Comment