நவம்பர் பத்தாம் தேதி நடந்த மொரிசியஸ் நாடாளுமன்றத் தேர்தலில் நவீன் ராம் கூலம் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்கு முன்பு 2005 – 2014 வருடங்களில் இவர் அந்நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். நவீன் ராம் கூலத்தின் முன்னோர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகாரிலிருந்து பணியாளர்களாக மொரிசியஸ் சென்றவர்கள். அங்கு இன்று இருப்பவர்களில் 70 சதவிகித மக்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அதில் 12 சதவிகிதம் வரை தமிழர்கள். ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் இன்று அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
ஆப்ரவசி காட். இந்தியர்கள் முதன்முதலில் மொரிசியசில் கால் பதித்த இடம். 1830- 1920 களின் கால கட்டத்தில் நான்கரை லட்சம் பேர் பல நாடுகளிலிருந்து மொரீசியஸ் தீவுக்குப் பணியாளர்களாக வரவழைக்கப் பட்டனர். அப்படி வந்தவர்கள் போர்ட் லூயிஸ்க்கு அருகில் கூலி காட் என்ற பகுதியில் தான் முதலில் தங்கவைக்கப்பட்டனர். அந்தக் கூலி காட் தான் இப்போது ஆப்ரவசி காட்.
பல வார கப்பல் பயணம் முடித்து வருபவர்கள், முதலில் குளித்து முடித்து தங்களைச் சுத்தம் செய்துகொள்ளவேண்டும் என்பது அங்கே முக்கியமான விதிமுறை. அங்கிருந்த கற்கட்டடத்தில், நுழைவுப் பகுதியில் இருபுறங்களிலும் தண்ணீர்த் தொட்டிகள் இருந்தன. ஆண்கள் – பெண்களுக்கென தனித்தனி தொட்டிகள், கழிவறை வசதிகள். அவை நாளுக்கு மூன்று முறை சுத்தப்படுத்துவது எனச் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
Add Comment