உக்ரைனின் மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்யாவின் குண்டுகள் தகர்த்தெறிவதைக் கண்டு உலகமே பதைத்திருக்கும் வேளையில், ரஷ்ய அதிபர் புடினைக் கட்டி ஆரத்தழுவிப் புளகாங்கிதமடைகிறார் பாரதப் பிரதமர் மோடி.
கைகளில் இருந்த ஐவியுடன் சிதறிப்போன உடல்களும் இரத்தம் நிறைந்த முகங்களுடனான குழந்தைகளின் உடல்கள் ஒரு பக்கம், அதற்குக் காரணமான ரஷ்யாவின் தலைவர் புடினுடன் புன்னகை புரிந்த மோடியின் புகைப்படங்கள் மறு பக்கம் எனத் தொலைக்காட்சி ஊடகங்கள் திகைத்துத்தான் போய்விட்டன.
ரஷ்யா, தனித்துவிடப்படவில்லை எனக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் அதிபர் புதினுக்கு. இந்தியாவுடனான அமெரிக்க உறவு எப்போதுமே பிரச்சினை நிறைந்தது. இந்தியா எப்போதும் மதில் மேல் பூனையாக, எங்கே வாய்ப்புகள் அதிகமோ அந்தப் பக்கம் திசைமாறக் கூடியதுதான்.
இப்போது ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை அடிமாட்டு விலைக்கு வாங்கி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. இந்தியா அதிக விலை கொடுத்து எரிபொருளோ கச்சா எண்ணெயோ வாங்க முடியாது, அதன் வளரும் பொருளாதாரத் தேவைகளுக்கு ஈடு கொடுக்க வேண்டும். எனவே அது ரஷ்யாவை நம்பித்தானாக வேண்டும்.
Add Comment