ஒரு நாள் அழைப்பு வரும்
அன்று நூலகத்தின் வரவேற்பறை வழக்கத்துக்கு மாறாக ஒரு போர்க்களத்தைப் போலக் காட்சியளித்தது. எங்கு நோக்கினும் மாணவர் கூட்டம். கையில் மடிக்கணினிப் பையுடனும், தடிமனான பாடப்புத்தகங்களுடனும் அவர்கள் இரண்டாம் தளத்திலுள்ள தனிப் படிக்கும் அறைகளை (Study Rooms) பதிவு செய்ய முண்டியடித்துக் கொண்டிருந்தனர். தேர்வு நேரங்களில் நூலகம் நிரம்பி வழிவது உலகளாவிய வழக்கம் என்றாலும், இங்கே இரண்டாம் தளம் மாணவர்களின் ஆகச்சிறந்த புகலிடம்.
வரவேற்பறையில் இருந்த ராஷீத், நிதானத்துடன் ஒவ்வொருவருக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார். வரிசையில் நின்ற மாணவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை ராஷீத்திடம் காட்டினர். பின்னர் அங்கிருந்த திரையில் தங்களுடைய அலைபேசி எண்களைப் பதிவு செய்து, தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
‘தனியாகப் படிக்கும் அறைகளா அல்லது குழு விவாதத்துக்கான இடமா?’ என ராஷீத் அரபியிலும் ஆங்கிலத்திலுமாக மாறி மாறி வினவி, அறைகளை ஒதுக்கிக் கொண்டிருந்தார். ஒரு நிமிடம் கூட அவரது கண்கள் திரையை விட்டு நகரவில்லை. திரையில் மின்னும் எண்களும், மாணவர்களின் அவசரமும் அந்த இடத்தைப் பரபரப்பாக்கிக் கொண்டிருந்தன. மாணவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தபோது எனக்கான இடம் அன்று அங்கே கிடைப்பது அரிது என்பது புரிந்தது.








Add Comment