அமெரிக்காவின் இரு பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று ஜனநாயகக் கட்சி. ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் மிகப் பெரிய கட்சி, பழமையான கட்சி. உரிமையியல் (civil) போருக்குப்பின், தெற்குப் பகுதிகளில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளை எதிர்த்த காரணங்களாலேயே வரவேற்பைப் பெற்ற கட்சி. ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம், அதுதான் உண்மை! இப்போது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், பெண்களின் உரிமைகளுக்கும் தொழிற்சங்களுக்குக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் மற்ற எல்லாப் புரட்சிகரமான வளர்ச்சித் திட்டங்களுக்கும் ஆதரவாக இருக்கும் ஜனநாயகக் கட்சி ஆரம்பக் காலத்தில் அப்படி இல்லை என்பதே கசப்பான உண்மை!
வரலாற்றின் அடிமுதல் சென்று பார்த்தால் எப்படி எல்லாம் ஜனநாயகக் கட்சியின் கொள்கைகள் மாறி இருக்கின்றன எப்படி இந்த ரசாயன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பது புரியும். மாற மாட்டேன் என்று இருப்பது அழகல்ல, நல்லவற்றிற்காகவும் மக்களின் நலனுக்காகவும் மாறி அரசு செய்வதே கட்சிக்கு அழகு. அப்படித் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொண்டே இருப்பதால்தான் இது பெரும்பான்மை மக்களுக்குப் பிடித்த கட்சியாகவும் இருக்கிறதோ என்னவோ?
பழமைவாத பெடரலிஸ்ட் (Federalists) கட்சியை எதிர்த்த ஜேம்ஸ் மாடிசன், தாமஸ் ஜெஃஅர்சன் (Thomas Jefferson, James Madison) போன்றோர்கள் 1792-இல் ஒன்று சேர்ந்து ஜனநாயகக் குடியரசுக் கட்சியை ஆரம்பித்தார்கள். ஆனால் நவீன ஜனநாயகக் கட்சி தோன்றும் முன்னேயே இந்தக் கட்சி பயனில்லாமல் போய்விட்டது. இந்தக் கட்சிதான் குடியரசுக் கட்சியில் விக் (whig) அமைப்பு உருவாகவும் காரணமாக இருந்தது. ஆன்ரூ ஜாக்சன்(Andrew Jackson) தேர்ந்தெடுக்கப்பட்டபின் நவீன ஜனநாயகக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
Add Comment