டெல்லி சரஸ்வதி விஹாரில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகிய இருவரும் 1984ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது டெல்லி சிறப்பு நீதிமன்றம்.
இருவரையும் கொடூரமான முறையில் கொன்றதும் அவர்களுடைய வீட்டை எரித்து உடைமைகளைச் சூறையாடியதும் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருப்பதாகச் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா தன்னுடைய தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். எண்பது வயதாகும் சஜ்ஜன் குமார் டெல்லி கண்டோன்மன்ட் பகுதியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திலும் ஐந்து சீக்கியர்களைக் கொலை செய்த வழக்கில் 2018ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருக்கிறார்.
சஜ்ஜன் குமார் மீதான குறிப்பிட்ட இந்த வழக்கு 1991ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது. போதுமான ஆதாரங்கள் இல்லை எனச் சொல்லி 2013ஆம் ஆண்டு அவரை விடுதலை செய்தது நீதிமன்றம். அதனை எதிர்த்து சிபிஐ டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சஜ்ஜன் குமாருக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இருப்பதை 2021ஆம் ஆண்டு உறுதி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம். இந்த வழக்கில்தான் ஆயுள் தண்டனையும் கொடிய அயுதங்களுடன் தீங்கு விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டதற்காக பன்னிரண்டாண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது. சஜ்ஜன் குமார் செய்த கொலைகளுக்காக அவருக்கு மரண தண்டனையைத் தீர்ப்பாக அறிவிக்க வேண்டும் என்பது சீக்கியர்களின் கோரிக்கையாக இருந்தது. பலமுறை வழக்கை ரத்து செய்ததும் மேல்முறையீட்டுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொண்டதும் அரசியல் தலையீடும்தான் இந்த வழக்கில் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு தாமதமாக நீதி வழங்கப்பட்டதற்கான காரணங்களாக இருக்கின்றன.
Add Comment