டிசம்பர் மூன்றாம் தேதி, மணி இரவு பதினொன்றைக் கடந்திருந்தது. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அந்நாட்டுத் தொலைக்காட்சிகளில் தோன்றினார். நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வழங்கப்போவதாகப் பேச்சைத் தொடங்கினார். ‘நாடு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. வட கொரியக் கம்யூனிச சக்திகளிடம் இருந்து பாதுகாக்க ராணுவ ஆட்சி தேவைப்படுகிறது’ எனக் கூறினார். நிற்க, இங்கே அவர் குறிப்பிடும் ‘வட கொரியக் கம்யூனிச சக்திகள்’ தென் கொரியாவின் எதிர்க்கட்சிகள். மேலும், நாடாளுமன்றம் தேச விரோதிகளால் நிறைந்துள்ளது, அவர்களைக் கட்டுப்படுத்த ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படுகிறது என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
பேச்சை முடித்த அவர் எழுந்து சென்றது தான் தாமதம். அதற்குள் சியோலில் இருக்கும் நேஷனல் அசெம்பிளி எனப்படும் நாடாளுமன்ற கட்டடத்தை ராணுவம் சுற்றிவளைக்கத் தொடங்கியது. எதிர்பாராமல் வந்த ஜனாதிபதியின் தொலைக்காட்சி அறிவிப்பையும், அதையொட்டி நடக்கும் செயல்பாடுகளையும் உணர்ந்த மக்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் சுதாரிக்கத் தொடங்கினர். தென் கொரியாவின் விறுவிறுப்பான கே- டிராமாக்களுக்கு சற்றும் குறைவின்றி இருந்தது சியோலில் அன்றைய இரவு.
ராணுவ ஆட்சி என்றால் தெரியும் தானே, பொது நிகழ்வுகள் நடக்காது. அரசியல் – பொதுக் கூட்டங்களுக்குத் தடை. யாரையும் முன்னறிவிப்பின்றிக் கைது செய்யலாம். எதிர்க் கேள்விகள் கருத்துகள் கூடாது. இத்யாதி.
Add Comment