அரசியல் ஆசை
விஜய்யின் அரசியல் ஆசை எப்பொழுது துளிர் விட்டது என்று தெரியவில்லை. ஆனால் உச்சத்திலிருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வரக்கூடிய ஆசைதான். உள்ளூர அனைவருக்கும் அரசியலில் இறங்க வேண்டும், வெல்ல வேண்டும், முதல்வராக வேண்டும். மெல்ல மெல்ல அடுத்த கட்டத்துக்குப் போவது என்பது படங்களுடன் முடிந்துவிடும். இங்கு நினைத்தவுடன் யாரும் உச்சத்திற்குச் செல்ல முடியாது. ஆனால் அரசியலில் முடியும். இந்த லட்சியத்துக்கான விதை மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் போட்டது.
தான் உண்டு தன்னுடைய நடிப்புண்டு என்று இருந்த விஜய்க்கு அடுத்தடுத்து வந்த சில படங்கள் பரபரப்பான விவாதங்களைக் கொண்டு வந்ததுடன் பிரச்சனைகளையும் சேர்த்துக் கொண்டு வந்தன. விஜய் படங்கள் வெளியாகும் நேரங்களில் எல்லாம் ஏதோவொரு தடை உடன் வரும். அதை மீறித்தான் அவருடைய படங்கள் சில காலமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தலைவா, மெர்சல், சர்க்கார். அவர் படங்களில் மாநில, மத்திய அரசியல் இரண்டையும் சீண்டி வைக்கப்பட்ட காட்சிகள் இருக்கின்றன என்று அரசியல்வாதிகள் ஆராயக் களமிறங்கினார்கள். கூடிப் பேச ஆரம்பித்தார்கள். ஒரு நடிகரை அரசியல்வாதியாக்குவதற்கு வேறு எதுவுமே தேவையில்லை. ஊடகங்களும், அந்த அரசியல்வாதிகளுமே போதும் என்று மீண்டும் நிரூபித்த நிகழ்வுகள் இவை.










Add Comment