இந்தியாவில் ‘சஹகார் டாக்ஸி’ என்ற பெயரில் கூட்டுறவு டாக்ஸி செயலிச் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறையின் அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். தற்போது இயங்கி வரும் தனியார் செயலி டாக்ஸி சேவைகளான ஓலா, ஊபர் போன்றவற்றுக்கு மாற்றாக இது செயல்பாட்டுக்கு வரும் என்றும், தனியார் செயலிகளின் பாரபட்சமான கட்டண விதிப்புகளில் இருந்து இந்தியப் பயனாளர்களைக் காப்பாற்றவே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளதன் விளைவாக, இணைய வழியில் டாக்ஸி, ஆட்டோ பயணச் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பிரபலமாகியுள்ளன. முக்கியமாக, இந்திய நிறுவனமான ஓலாவும், அமெரிக்க நிறுவனமான ஊபரும் இத்துறையில் வலுவாகக் கால்பதித்து, வெற்றிகரமாகச் செயலாற்றி வருகின்றன. இவை அறிமுகமானபோது மக்களுக்கு பயணம் செய்வதற்கான விருப்பத்தேர்வுகள் அதிகமானதோடு, தங்களுக்கேற்ற பட்ஜெட்டுக்குள் பயணம் செய்யக்கூடிய வாய்ப்புகளும் உருவாயின. மக்களுக்கு, குறிப்பாக நகர்புறவாசிகளுக்கு, பயணம் எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் மாறியது.
இந்தச் செயலிச் சேவைகள் செயல்படும் விதம் எளிமையானது. Service aggregators (சேவைத் திரட்டிகள்) ஆகச் செயல்படும் இந்தத் தனியார் செயலிகளுக்கெனச் சொந்தமாக டாக்ஸிகள் இருக்காது. அதாவது, இவை ஓர் ஊரில் சேவை வழங்குவதற்கு, அந்த ஊரில் இருக்கும் டாக்ஸி உரிமையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி அவர்களுக்கு தாங்கள் நிர்ணயிக்கும் பயணக் கட்டணங்களின் ஒருபகுதியைச் சம்பளமாக வழங்கும். அதே போல, பயனாளர்களுக்குத் தங்கள் செயலி மூலமாக மிக விரைவாக, மிகக் குறைவான கட்டணத்தில் கிடைக்கக்கூடிய பயணத் தேர்வுகளை வழங்கி அவர்களை மீண்டும், மீண்டும் தங்கள் சேவைகளைப் பயன்படுத்த வைக்கும். பயணிகள் செலுத்தும் கட்டணங்களில் இருந்து ஒரு பகுதியை கமிஷனாகப் பெற்று லாபம் சம்பாதிக்கும்.
Add Comment