இந்திரா நூயி
உலகப்புகழ் பெற்ற வணிக நிறுவனங்களின் தலைவர்களுள் ஒருவர் இந்திரா நூயி. 1955ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் இரண்டாவது மகளாகப் பிறந்தார். இந்திரா நூயியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் வங்கியில் பணி செய்தவர். தாயார் சாந்தா கிருஷ்ணமூர்த்தி இல்லத்தரசி. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிராமணக் குடும்பம். தாத்தா பாட்டியோடு கூட்டுக் குடும்ப அமைப்பில் வளர்ந்தார்.
இந்திரா நூயி இன்றைக்கு அடைந்திருக்கும் உயரத்துக்குக் காரணம் அவருடைய தந்தை வழிப் பாட்டனார் என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லியிருக்கிறார். செய்வன திருந்தச் செய் என்பதை, எதைச் செய்வதாக இருந்தாலும் சிறப்பாகச் செய், இல்லையென்றால் அதைச் செய்யவே செய்யாதே என்பதை மந்திரமாகவே இந்திரா நூயிக்குச் சொல்லித் தந்தார் அவர்.
சிறுவயதில் தினமும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிடும் பழக்கமுள்ள இந்திரா நூயி, தாத்தாவுக்குச் செய்தித்தாள்களை வாசித்துக் காட்டுவார். தனக்குக் கண்பார்வை சரியில்லை எனப் பொய் சொல்லி இந்தச் செயலுக்கு அவரை பழக்கப்படுத்தியதே அவருடைய தாத்தாதான். இந்தப் பழக்கம் பின்னாட்களில் இந்திரா நூயிக்குப் பல வகைகளில் உதவியது.








Add Comment