150. கொல்லத் தகும்
கருவூர்ச் சித்தர், கோள்களின் இருப்பினைக் கணக்கிட்டு, அது வேட்டன் எறிபத்தனுக்குப் பெரிய சிக்கல்களை விளைவிக்கக்கூடிய காலமெனக் கணித்திருந்தார்.
இது இன்று தொடங்கவிருப்பதல்ல சிவந்தி. சில திங்கள்களுக்கு முன்பிருந்தே அவனுக்குக் கோள்களின் சகாயம் குறைய ஆரம்பித்துவிட்டது. அவன் நமது சாலையை விட்டேகினான். வீட்டை விட்டேகினான். ஊரை விட்டேகினான். எங்கெங்கோ அலைந்து திரிந்து மீண்டும் என்னிடம் வந்து சேர்ந்தான். அப்போதே அவனது ஜாதகக் கட்டத்தில் கோள்களின் இருப்பினை ஆராய்ந்து பார்த்தேன். கூடா நட்பின் விளைவாக அவன் திசை மாறிச் செல்லும் வாய்ப்புகள் மிகவும் துல்லியமாகத் தெரிந்தன. வேட்டன் நல்லவன். தெளிந்த சிந்தை கொண்டவன். அவனால் அரசாங்க விவகாரங்களில் எத்தகு சிக்கல்கள் உண்டானாலும் சீராக்க முடியும். புண்ணியகுமார சோழனுக்கு அவனொரு சிறந்த மதியூகியாக அமர்வானென்று கண்டுணர்ந்தேன். இட மாற்றமும் புதிய பொறுப்பும் அவனைச் சற்று நிதானம் கொள்ளச் செய்யுமென்றுதான் ஆறைக்கு நான் செல்லாமல் அவனை அனுப்பினேன்,
என்று அவர் சிவந்தியிடம் சொன்னார்.
அது நிகழவில்லையா ஐயனே என்று அவள் கேட்டாள்.











Add Comment