149. பிடாரி
இது என் முடிவு. சரியா தவறா எனும் இருமைக்குள் செல்ல விரும்பவில்லை. தவறே ஆனாலும் இதுவே எனக்கு வசதியாக இருக்குமென்று தோன்றியதால் இம்முடிவினை எடுத்திருக்கிறேன்.
நீங்கள் இதனை ஒருக்கால் ஏற்க மறுக்கலாம். அத்துமீறலென நினைக்கலாம். கொடுத்த வாக்கை மீறுகிறேன் எனலாம். ஆம். நானளித்த வாக்குதான். என்ன நிகழ்கிறதோ அது. எதைப் படிக்கிறேனோ அது. நான் ஏந்தி எடுக்கும் விவரங்களைச் சிந்தாமல் உங்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன். இடையில் என் கருத்தென எதையும் கலப்பதில்லை. என் உணர்ச்சிக்கு இடமளிப்பதில்லை. எல்லாம் சார்வாகனுடையவை. அவனது அன்புக்கும் விரோதத்துக்கும் ஆட்பட்டவர்களுடையவை. அதில் மாற்றமில்லை.
நியாயமாக இப்போது நான் செய்ய வேண்டியதென்ன? பாரதாய தத்தனை அமர வைத்துச் சார்வாகன் சில பேருண்மைகளை விவரிக்கத் தொடங்கியிருக்கிறான். அவனது சிந்தைக்குள் இருப்பது நானே என்பதால் நான் மட்டுமே அத்தருணத்துக்குச் சாட்சியாவேன். எனவே, நடந்ததை நடந்த வண்ணம் உங்களுக்கு எடுத்துச் சொல்லும் கடப்பாடு என்னைச் சாரும். அதாவது அச்சல்லாபக் காட்சியினை அது நிகழ்ந்த விதமாகவே விவரிப்பது.











Add Comment