42. இரும்புக் கரம்
1897 மார்ச்சில் கோகலே லண்டனுக்குக் கப்பலேறுவதற்குச் சில வாரங்கள் முன்பாக இந்தியாவில், குறிப்பாக அதன் மேற்கு மாநிலங்களில் புபோனிக் பிளேக் என்ற தீவிரமான நோய் பரவத்தொடங்கியிருந்தது.
அதற்குச் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பாக இதே பிளேக் இந்தியாவைத் தாக்கியிருந்தது. ஆனால், அதன்பிறகு ஓரிரு தலைமுறைகள் கடந்துவிட்டதால் மக்கள் அதன் கொடுமைகளை முற்றிலுமாக மறந்திருந்தார்கள். இப்போது திடீரென்று இன்னொரு தாக்குதல் தொடங்கியதும் செய்வதறியாது திகைத்தார்கள்.
மக்கள்மட்டுமில்லை, அரசாங்கமும் இந்தப் பிளேக்கைக் கண்டு அதிர்ந்து நின்றுவிட்டதுதான் கொடுமை. இதற்கு எப்படிச் சிகிச்சையளிப்பது, உயிருக்கு ஆபத்தான இந்த நோய் புதியவர்களுக்குப் பரவாமல் எப்படித் தடுப்பது என்றெல்லாம் மருத்துவர்களுக்குக்கூடத் தெளிவாகப் புரியவில்லை. அரைகுறையாக ஏதோ சில முயற்சிகளை எடுத்தார்கள். நோய் அதற்கெல்லாம் கட்டுப்படாமல் அதிவிரைவாகப் பரவலானது. கராச்சி (இப்போது பாகிஸ்தானில் உள்ளது), மும்பை, சூரத், புணே உள்ளிட்ட நகரங்கள் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.









Add Comment