48. வேலையில் மூழ்கல்
புணே பிளேக் தடுப்புக் குழுவின் நடவடிக்கைகளைப்பற்றிய பஞ்சாயத்துகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். சில வாரங்கள் அமைதியாக இருந்த பிளேக் நோய் மீண்டும் முளைத்தெழுந்தது, நகரெங்கும் மிக விரைவாகப் பரவத் தொடங்கியது.
முன்பு போலவே இம்முறையும் மக்கள் பிளேக்கை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் திகைத்தார்கள். அரசாங்கமும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய இயலாமல் மலைத்துப்போய் நின்றது. ஒருவேளை அவர்களிடம் சரியான மருந்துகள், குணப்படுத்தும் செயல்முறைகள் இருந்திருந்தாலும்கூட, இத்தனைப் பெரிய நகரத்தில் அவற்றைச் செயல்படுத்துவதும், தூய்மையை வலியுறுத்துவதும் எளிதாக இருந்திருக்காது.
அதனால், பொதுமக்களும் சமூக அமைப்புகளும் சேர்ந்து சில தன்னார்வலர் குழுக்களை உருவாக்கினார்கள். இவர்கள் நகரெங்கும் சுற்றிவந்து சேவை செய்தார்கள், நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனித்துக்கொண்டார்கள், மற்றவர்களுக்கு நோய் பரவாதபடி தடுக்க முயன்றார்கள். இது அரசாங்கத்தின் சுமையைக் குறைத்து உதவியது.










Add Comment