49. இடுக்கண் களைதல்
பிளேக் நோய் புணேவை அத்தனை எளிதில் விட்டுவிடவில்லை. 1897ல் மட்டுமின்றி, 1898, 1899 ஆகிய ஆண்டுகளிலும் அந்நகரைப் பிளேக் தாக்கியது, பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கியது.
நம் கை ஒரே நேரத்தில் ஐந்தாறு வேலைகளைச் செய்துகொண்டிருக்கலாம்; ஆனால், இடுப்பு வேட்டி நழுவுகிறது என்றால், அது மற்ற வேலைகளையெல்லாம் விட்டுவிட்டுச் சட்டென்று விரைந்து சென்று வேட்டியைப் பிடித்துக்கொள்கிறது. ஒவ்வொரு முறை பிளேக் நோய் புணேவைத் தாக்கியபோதும் கோகலே அந்தக் கையைப் போலத்தான் செயல்பட்டார், தன்னுடைய கல்லூரி, அரசியல், எழுத்து, சமூக வேலைகளையெல்லாம் அப்படியே போட்டுவிட்டுப் பிளேக் தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.
இத்தனைக்கும் அவர் பெரிய மனக்கசப்பில் இருந்த காலகட்டம் இது. ஏனெனில், 1897 பிளேக் தடுப்பு நடவடிக்கைகளைப்பற்றி அவர் குற்றம் சொன்னபோது, புணேவில் யாரும் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை. இதனால், அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக முன்னேறிக்கொண்டிருந்த அவருக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸ் போன்ற பெரிய மேடைகளில் அவர் தயக்கத்துடன் ஒதுங்கி நிற்கவேண்டியதாகிவிட்டது.










Add Comment