54. திடீர்ப் பாய்ச்சல்
கோகலே தனக்கென்று வகுத்துக்கொண்ட அரசியல் பாதையில் முதல் மைல் கல், பம்பாய்ச் சட்டப் பேரவை உறுப்பினராவது; அடுத்த மைல் கல், இந்தியாவை ஆளும் உயர்நிலைச் சட்டப் பேரவை உறுப்பினராவது.
இந்த இரண்டு பதவிகளையும் இன்றைய அரசியல் கட்டமைப்பின்படி மொழிபெயர்த்துச் சொல்வதென்றால், பம்பாய்ச் சட்டப் பேரவை உறுப்பினர் என்பவர் MLA, அதாவது, மாநிலச் சட்டப் பேரவை உறுப்பினரைப் போன்றவர்; உயர்நிலைச் சட்டப் பேரவை உறுப்பினர் என்பவர் MP, அதாவது, நாடாளுமன்ற உறுப்பினரைப் போன்றவர். என்னதான் கோகலேவுக்குப் பம்பாய் மாகாணத்தின் அரசியலில் ஆர்வம் இருந்தாலும், அவருடைய உண்மையான இலக்கு அது இல்லை. தன்னைத் தேசிய அளவிலான ஒரு தலைவராக முன்னிறுத்திக்கொள்ளத்தான் அவர் விரும்பினார். அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்துகிற ஓர் இடைநிலைப் பொறுப்பாகத்தான் அவர் இந்தப் பம்பாய்ச் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியைக் கருதினார்.
அதே நேரம், பம்பாய்ச் சட்டப் பேரவைக்குள் நுழைந்தவுடன் கோகலே தன்னுடைய அடுத்த மைல் கல்லைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருக்கவில்லை. முதலில் இங்கிருக்கிற நடைமுறைகளையெல்லாம் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும், சரியான சிக்கல்களை முன்வைத்துப் பேசிப் பழகவேண்டும், சட்டப் பேரவை சார்ந்த குழுக்களில் பங்கேற்றுக் கூடுதல் அனுபவம் பெறவேண்டும், அதன்மூலம் மக்களிடையில், மற்ற சட்டப் பேரவை உறுப்பினர்களிடையில், ஆட்சியாளர்களிடையில் நல்ல பெயர் வாங்கவேண்டும், இதையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய அடுத்த நிலை வளர்ச்சிக்குத் திட்டமிடவேண்டும் என்றுதான் அவர் எண்ணியிருந்தார்.










Add Comment