65. ஆன்மிகப் பொதுவாழ்க்கை
சமதளத்தில் நடக்கவேண்டும் என்றால், யார் வேண்டுமானாலும் ஏதோ ஒரு செருப்பை மாட்டிக்கொண்டு, கையை வீசிக்கொண்டு நடக்கலாம். ஆனால், மலையேறி, இறங்கவேண்டுமென்றால் நல்ல உறுதியான காலணி, சமநிலைக்காக ஒரு குச்சி போன்றவை தேவைப்படும். அதோடு, அதற்கேற்ற உடல்தகுதி உள்ளவர்களால்தான் இதைச் செய்யமுடியும்.
ஒருவேளை, அந்த மலை இமயத்தைப்போல் பனி படர்ந்ததாக, மிக உயரமானதாக இருந்தால் சிறப்புக் கருவிகள், ஆக்சிஜன் உருளை, குளிர் தாங்கும் ஆடைகளெல்லாம்கூடத் தேவைப்படலாம். மாதக்கணக்கில் இன்னும் கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்டவர்களால்தான் அந்தப் பயணத்தில் ஈடுபடமுடியும்.
ஆக, நம்முடைய பயணம் எவ்வளவு கடினமானது என்பதுதான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகளைத் தீர்மானிக்கிறது. அத்துடன், அந்தப் பயணத்தில் என்னென்ன சிக்கல்கள் வரக்கூடும், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதையும் முன்கூட்டியே சிந்தித்து, அதற்கேற்ப நம் மனத்தை ஆயத்தப்படுத்திக்கொண்டுவிட்டால், அந்தச் சிக்கல் வரும்போது திகைத்து நிற்கமாட்டோம், அடுத்து என்ன செய்வது என்று நடுங்கமாட்டோம், ஏற்கெனவே தீர்மானித்தபடி நமக்கு நாமே ஆறுதல், தேறுதல் சொல்லிக்கொண்டு, உள்ளத்தைத் திடப்படுத்திக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவோம்.










Add Comment