78. எதையும் சிறப்பாகச் செய்யுங்கள்!
இந்திய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் நாட்டுச் சேவைக்காகத் தங்களை ஒப்படைத்திருந்தாலும், அவர்கள் திருமணம் செய்துகொள்ளத் தடையில்லை. ஆனால், சங்கக் கட்டடத்தில் அவர்கள் தனியாகத்தான் தங்கவேண்டும். அதாவது, அவர்கள் தங்களுடைய மனைவி, குழந்தைகளை வேறு இடத்தில் குடித்தனம் வைத்துவிடவேண்டும்.
இந்த விதிமுறை முதல் உறுப்பினரான கோகலேவுக்கும் பொருந்தும். அவருடைய மகள்களான காசிபாய், கோதாவரி இருவரும் இந்திய ஊழியர் சங்கத்துக்கு அருகில் ஒரு சிறு வீட்டில் தங்கியிருந்தார்கள். கோகலேவின் சகோதரி ஒருவர் அவர்களைக் கவனித்துக்கொண்டார்.
கோகலே தன் மகள்களை மிகவும் நேசித்தார். ஆனால், அரசியல் பணிகளும் பயணங்களும் அவருடைய நேரத்தை முழுமையாக எடுத்துக்கொண்டுவிட்டதால், எப்போதாவதுதான் அவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். ‘என் தந்தை தன்னுடைய சொந்த வீட்டுக்கே ஒரு விருந்தினரைப்போல்தான் வந்து போவார். இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், அரிதாக வருகிற சிறப்பு விருந்தினரைப்போல்தான் அவருடைய வருகை இருக்கும்’ என்றார் கோகலேவின் மூத்த மகள் காசிபாய்.










Add Comment