81. நானும் எளிமையானவன்தான்!
ஜொகன்னஸ்பர்கைத் தொடர்ந்து கோகலே நேட்டால், பிரிட்டோரியா ஆகிய நகரங்களுக்குச் சென்றார், மக்களையும் தலைவர்களையும் சந்தித்தார். அவருடைய தொடர்ச்சியான தேடலும் அக்கறையும் உறுதியான பேச்சும் நட்பான அணுகுமுறையும் அனைவரையும் ஈர்த்தன.
பிரிட்டோரியாவில் தென்னாப்பிரிக்க ஆட்சியாளர்களைச் சந்தித்துத் திரும்பியபிறகு, ‘மிஸ்டர் காந்தி, இங்குள்ள இந்தியர்களுடைய சிக்கல்களெல்லாம் இன்னும் சில மாதங்களில் தீர்ந்துவிடும்’ என்று நம்பிக்கையோடு சொன்னார் கோகலே, ‘அதனால், நீங்கள் ஓராண்டில் இந்தியாவுக்குத் திரும்பிவிடுவீர்கள்.’
‘ம்ஹூம், எனக்கு நம்பிக்கையில்லை!’ என்றார் காந்தி. ‘உங்களுடைய நேர்ச் சிந்தனையை நான் மதிக்கிறேன். ஆனால், இங்குள்ள தலைவர்களைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் அத்தனை எளிதாக மனம் மாறிவிடமாட்டார்கள் என்று தோன்றுகிறது. அதனால் எங்களுடைய போராட்டம் இன்னும் சில ஆண்டுகளுக்காவது தொடரும் என்று நான் நினைக்கிறேன்.’









Add Comment