84. சிக்கல்கள் விடுபடும் நேரம்
தென்னாப்பிரிக்கச் சிக்கல்கள், பின்னடைவுகளைப்பற்றிக் கவலைப்பட்டுக் கோகலேவின் உடல்நலம் கெட்டுவிடக்கூடாது என்று காந்தி எவ்வளவோ முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. சொல்லப்போனால், காந்தி அஞ்சியதுபோல் தென்னாப்பிரிக்க இந்தியர்களைப்பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துக் கோகலே இன்னும் நோய்வாய்ப்பட்டார்.
ஏனெனில், ‘இதை எங்களிடம் விட்டுவிடுங்கள். நாங்கள் நன்றாகப் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் அமைதியாக ஓய்வெடுங்கள்’ என்று யார் சொன்னாலும் கோகலே ஏற்றுக்கொள்ளமாட்டார். களத்தில் இருப்பவர் தான் முழுமையாக நம்பிய காந்தியாகவே இருந்தாலும் கோகலே ஒவ்வொரு தகவலையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளத்தான் விரும்பினார், அதைப்பற்றித் தொடர்ந்து சிந்தித்துத் தீர்வுகளைக் கண்டறிந்தார், அல்லது, சரியான தீர்வுகள் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்.
போதாக்குறைக்கு, காந்தியின் சில அரசியல் முடிவுகள் கோகலேவின் சிந்தனைகளுடன் பொருந்திப்போகவில்லை. அங்குள்ள நிலவரம் தன்னைவிடக் காந்திக்குதான் நன்றாகத் தெரியும் என்பதைக் கோகலே அறிவார். அதனால், அவரை வற்புறுத்தவும் இயலாமல், தான் சரி என்று நினைப்பதைச் செயல்படுத்தவும் இயலாமல் தவித்தார். தென்னாப்பிரிக்காவிலிருந்து நெடுந்தொலைவில் அமர்ந்துகொண்டிருப்பதால், காந்தியிடமிருந்து அடுத்த கடிதம் அல்லது தந்தி வரும்வரை அங்கு என்ன நடக்கிறதோ என்கிற பதற்றமும் அவரை ஆட்கொண்டது.









Add Comment