87. தேடி வந்த வேலைகள்
1914ம் ஆண்டில் கோகலே இங்கிலாந்துக்கு வந்தது பொதுப் பணிகள் ஆணையம் தொடர்பான கூட்டங்களுக்காகத்தான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அவருக்குள் அந்த ஆர்வம் வடிந்துகொண்டிருந்தது. விரைவில் இந்தியாவுக்குத் திரும்பிவிடவேண்டும் என்று நினைக்கத் தொடங்கினார் அவர்.
முதலில், உலகெங்கும் போர் அச்சம் சூழ்ந்திருந்தது. இந்த நேரத்தில் ஆணையத்தைப்பற்றி விவாதித்துக்கொண்டு இங்கிலாந்தில் அமர்ந்திருப்பதைவிட, இந்தியாவில் இருந்தால் பல ஆக்கப்பூர்வமான பணிகளைக் கவனிக்கலாம் என்று கோகலேவுக்குத் தோன்றியது.
அடுத்து, ஆணையக் கூட்டங்கள் சரியான திசையில் செல்வதாகத் தெரியவில்லை. இந்திய உறுப்பினர்களுடைய கோரிக்கைகள் எவற்றுக்கும் ஆங்கிலேய உறுப்பினர்கள் உடன்படவில்லை. அதேபோல், ஆங்கிலேய உறுப்பினர்கள் முன்வைக்கும் யோசனைகளையெல்லாம் இந்திய உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப்போகிறது என்று கோகலேவுக்குத் தெரியவில்லை. ‘எப்படியும் பிரிட்டிஷ்காரர்கள் தாங்கள் நினைப்பதைத்தான் அறிக்கையாக வெளியிடப்போகிறார்கள். அதற்கு நாம் ஏன் இங்கிலாந்தில் அமர்ந்திருக்கவேண்டும்?’ என்று எரிச்சலடைந்தார் அவர்.









Add Comment