88. உங்கள் ஆசிரமம் என் ஆசிரமம்!
இந்திய ஊழியர் சங்கத்தின் தலைமையகம் புணேவுக்கு வெளியிலிருந்த கிராமச் சூழல் கலந்த புறநகர்ப் பகுதியொன்றில் அமைந்திருந்தது. கோகலேவின் விருந்தினராகப் புணேவுக்கு வந்த காந்தி அங்குதான் தங்கியிருந்தார்.
ஆனால், மற்ற விருந்தினர்களைப்போல் இவர் கொடுத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, அரட்டையடித்துக்கொண்டு ஓய்வெடுக்கவில்லை. அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சமையல், துணி துவைத்தல், தூய்மைப்படுத்தல் போன்ற பணிகளுக்கு வேலைக்காரர்களை அமர்த்தியிருப்பதைக் கேள்வி கேட்டார், ‘இதையெல்லாம் நாமே செய்துகொள்ளலாமே’ என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
அவருடைய இந்த அறிவுரைகள் இந்திய ஊழியர் சங்க வட்டாரங்களில் சலசலப்புகளை உண்டாக்கிக்கொண்டிருக்கிற நேரத்தில், காந்தி அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிட்டார், அதாவது, சும்மா இருக்கிற நேரத்தில் நானே இங்குள்ள கழிப்பறைகளையெல்லாம் தேய்த்துக் கழுவித் தூய்மைப்படுத்துகிறேன் என்று கிளம்பிவிட்டார். இதைப் பார்த்த சங்க உறுப்பினர்களும் மற்ற பணியாளர்களும் திகைத்துப்போனார்கள்.










Add Comment